தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு லட்டு கிடைக்க நடவடிக்கை: தேவஸ்தான அதிகாரி தகவல்

திருமலை: திருமலை அன்னமய்யா பவனில் திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா நிருபர்களிடம் கூறியதாவது: ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி லட்டு பிரசாதம் வழங்க ₹50 கோடியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தனியங்கி லட்டு தயாரிக்கும் இயந்திரங்கள் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் பொருத்தப்பட உள்ளது. இதனால், தினமும் 6 லட்சம் லட்டுகள் வரை தயார் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படும்.

திருமலை அருங்காட்சியகம் சர்வதேச அளவில் சிறந்த அருங்காட்சியகத்தில் ஒன்றாக தயாராகி வருகிறது. இவை டிசம்பருக்குள் பக்தர்கள் பார்வைக்கு கொண்டு வரப்படும். கோயிலின் மூலவர் கருவறை மேல் உள்ள ஆனந்த நிலையத்தின் கோபுரம் தங்க தகடுகள் பதிக்கும் பணி 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்றொரு தேதி அறிவிக்கப்படும். ஆனந்த நிலையம் தங்க தகடுகள் பதிக்கும் பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உலகளவில் டெண்டர் அழைக்கப்பட உள்ளது.

இதற்கான செயல்முறைக்கு கால அவகாசம் தேவை என்பதால் தங்க தகடுகள் பதிக்கும் பணி ஒத்திவைத்துள்ளோம். பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணியை முடிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வருகிற 5,6ம் தேதிகளில் திருமலை ஆஸ்தான மண்டபத்தில் யுவ தர்மி கோத்ஸவத்தை நடத்தி இளைஞர்களுக்கு இந்து தர்ம தொடர்பான பயிற்சி அளிக்க உள்ளோம். இதில், 2 ஆயிரம் இளைஞர், இளம்பெண்கள் பங்கேற்க உள்ளனர் என்றார்.

Related Stories: