சேலையால் கழுத்தை நெரித்து கணவனை கொன்ற மனைவி கைது

திருவனந்தபுரம்: கள்ளக்காதலை கணவன் கண்டுபிடித்ததால், அவரை சேலையால் கழுத்தை நெரித்துக் கொன்று நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சித் பாஸ்வான்(33). இவரது மனைவி பூனம் தேவி(30) இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உண்டு. கடந்த சில வருடங்களுக்கு முன் கேரளாவில் குடியேறிய இவர்கள், மலப்புரம் அருகே உள்ள கோட்டக்கல் பகுதியில் ஒரு வாடகை குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பூனம் தேவிக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள ஒரு வாலிபருடன் நெருக்கம் ஏற்பட்டது.

கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் பூனம் தேவி அந்த வாலிபரை சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த விவரம் கணவன் சஞ்சித் பாஸ்வானுக்கு தெரியவந்தது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 31ம் தேதி இரவு சஞ்சித் பாஸ்வான் வழக்கம்போல வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அன்று நள்ளிரவு பூனம் தேவி பக்கத்து வீட்டுக்கு சென்று, தன்னுடைய கணவனுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாகவும், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து வேங்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து சென்று சஞ்சித் பாஸ்வானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திரூரங்காடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சஞ்சித் பாஸ்வானின் கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் பூனம் தேவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கள்ளக்காதலை கணவன் கண்டுபிடித்ததால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக போலீசிடம் தெரிவித்தார். இதையடுத்து பூனம் தேவியை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: