பாக். வீரர் ஷாகித் அப்ரிடி மகளுடன் ஷாகின்ஷா அப்ரிடி திருமணம்

கராச்சி: பாகிஸ்தான் அணியின் மிரட்டும் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முகமது அமீருக்கு பிறகு அந்த இடத்தை நிரப்பியவர் ஷாகின் அப்ரிடி. பால் வடியும் முகம்போல் தோற்றம் கொண்டாலும், பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் அவர் வில்லன் தான். தனது 18 வயதில் பாகிஸ்தானுக்காக 2018ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஷாகின்ஷா அப்ரிடி, சில போட்டிகளிலேயே உலகின் நம்பர் 1 வீரராக அறியப்பட்டார். 25 டெஸ்ட் போட்டியில் விளையாடி 99 விக்கெட்டுகளையும், 32 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 62 விக்கெட்டுகளையும். 47 டி20 போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

அதோடு 22 வயதுக்குள் சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானின் ஹீரோவாக திகழ்கிறார். மேலும், 2021ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் 3 முக்கிய இந்திய வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாகித்அப்ரிடி மகளை ஷாகின்ஷா அப்ரிடி காதலிப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஷாகித் அப்ரிடி தான் தனது மகளை ஷாகின்ஷா அப்ரிடிக்கு திருமணம் செய்து தர முன் வந்ததாக செய்திகள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து ஷாகித் அப்ரிடி ரமலான் நோன்பு நிகழ்ச்சிக்கு ஷாகின்ஷா அப்ரிடியை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார். இந்நிலையில் நமக்கு இப்படி ஒரு மாமனார் இல்லையே என ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு நடந்து கொண்ட ஷாகித் அப்ரிடி, இன்று முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். இத்தனைக்கும் அவருக்கு 22 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அன்சாவுடன் ஷாகின்ஷா அப்ரிடி திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வாரம், காதல் வாரம் என்பது போல் சர்வதேச கிரிக்கெட் வீரர்களான ராகுல், அக்சர் பட்டேலுக்கு திருமணம் நடந்தது. இதனைத்  தொடர்ந்து ஷாகின்ஷா அப்ரிடிக்கும் திருமணம் நடந்துள்ளது.

Related Stories: