வங்கியில் இன்வெர்ட்டர்கள் வெடித்தது: கொடுங்கையூரில் பரபரப்பு

பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் எம்ஆர். நகர் எத்திராஜ் சுவாமி சாலையில் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வங்கி திறக்கப்பட்டு ஊழியர்கள் பணியை கவனித்துக்கொண்டிருந்தனர். அப்போது மின்வெட்டு ஏற்பட்டதால் இன்வெர்ட்டர்கள் தானாக செயல்பட தொடங்கிய சில நிமிடங்களில் அந்த அறையில் இருந்து பயங்கர சத்தம் ஏற்பட்டு புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், வங்கியில் இருந்து வெளியே ஓடிவந்துவிட்டனர். இதன்பிறகு வங்கி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செம்பியம், வியாசர்பாடி, கொருக்குபேட்டை மற்றும் வண்ணாரப்பேட்டை  ஆகிய பகுதிகளில் இருந்து 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்து, மத்திய சென்னை தீயணைப்பு அலுவலர் சரவணன் தலைமையில் தீயை அணைத்தனர். இன்வெர்ட்டர் அறையின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே சென்று  ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சியடித்து புகையை கட்டுப்படுத்தினர். இதன்பிறகு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க  மூச்சு கருவியை பயன்படுத்தியும் புகை போக்கிகளை பயன்படுத்தியும்  நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த விபத்தில்  40 இன்வெர்ட்டர்கள் தீயில் கருகி நாசமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வங்கி மேலாளர் அளித்த புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்துக்கான காரணம் பற்றி விசாரிக்கின்றனர்.

Related Stories: