திருப்பத்தூர் அருகே ரூ.11 கோடியில் ஜவ்வாதுமலை-புதூர்நாடு சாலை பணி: மார்ச் இறுதிக்குள் முடியும் என கோட்ட பொறியாளர் தகவல்

திருப்பத்தூர்: ரூ.11கோடி நிதி ஒதுக்கீட்டில்  ஜவ்வாதுமலை - புதூர்நாடு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. மார்ச் இறுதிக்குள் முடிவடையும் என நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலை பகுதி உள்ளது. இந்த ஜவ்வாது மலைப்பகுதியில் புதூர் நாடு, புங்கம்பட்டுநாடு, நெல்லிவாசல் நாடு, என மூன்று ஊராட்சிகள் உள்ளது. சுமார் 35க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பகுதி மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவைகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர். நாள்தோறும் இப்பகுதி மக்கள் அடிப்படை தேவைகாகவும் அன்றாட வசதிக்காகவும் திருப்பத்தூர் நகருக்கு வந்து செல்கின்றனர்.

இவர்களுக்கான சாலை ஜவ்வாது மலை மேற்கத்தியனூர் அடிவாரத்தில் இருந்து புதூர் நாடு வரை 15 கிலோ மீட்டர் தூரம் குறுகிய தார் சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.

அதன் பின்னர் இந்த சாலைகள் பொதுமக்கள் மற்றும் கனரக வாகனங்கள் பயன்படுத்தி குண்டும் குழியுமாக பாதாள சாலைகளாக இருந்து வந்தது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்த கனமழையின் காரணமாக சாலை முழுவதும் குண்டும் குழியுமாகவும் பாதாள பள்ளங்களாகவும் இருந்து வந்தது இதில் விபத்துகள் நடந்து மக்கள் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இந்த நிலையில் அப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பலமுறை புதூர் நாடு கிராமத்திற்கு செல்ல தார் சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கைகளை வைத்தனர்.  ஆனால் சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் ஜவ்வாது மலை பகுதியில் கடந்த ஆண்டு கோயிலுக்கு சென்ற பக்தர்கள் வேன் கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்தனர். அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி முதலமைச்சரின் நிவாரண நிதி வழங்க நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு புதூர் நாடு பகுதிக்கு வந்தார்.

அப்போது குண்டும், குழியுமாக தரமற்ற சாலையாக இருந்ததை கண்டு உடனடியாக அதற்கான திட்ட அறிக்கையை நெடுஞ்சாலைத்துறை மூலம் தயார் செய்து, உடனடியாக சாலை விரிவாக்கம் செய்யவும் 6 அடி சாலையை 12 அடி சாலையாக மாற்றி  மலைப்பாதைகளில் தடுப்புச் சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து ₹11 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து இந்த சாலைகள் அனைத்தும் காட்டுப்பகுதியில் செல்வதால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காரணத்தினால் வனத்துறையிடம் இருந்து அனுமதி பெற்ற பின்பு பணிகள் தொடங்க காலதாமதம் ஏற்பட்டு இந்த பணிகள் ஆனது கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 50 சதவீத பணிகள் முடிவடைந்து சாலைகள் விரிவாக்க பணி, மலைப்பகுதியில் விபத்துக்களை தடுக்க தடுப்பு சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கோட்ட பொறியாளர் முரளி கூறுகையில், ‘நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கத்தியனூர் - புதூர் நாடு சாலை தரமான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த தார் சாலை சிறப்பாக ₹11 கோடி மதிப்பில் அமைக்க பட்டு வருகிறது. மேலும் தடுப்புச்சுவர்களும்  அமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தனியாக செல்ல கான்கிரீட் தளம் 4 அடி அளவில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 50% பணிகள் முடிவடைந்துள்ளது மீதமுள்ள பணிகள் அனைத்தும் மார்ச் மாத இறுதிக்குள் முடிவடையும்’ என்றார். சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதற்கு மலைவாழ் மக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: