ரூ.16,133 கோடி வட்டிக்கு ஈடாக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை பெற ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா நிறுவனம் ஏற்கனவே கடனில் தத்தளித்து வருகிறது. இந்நிறுவனம், அலைக்கற்றைக்கான தவணை மற்றும் ஏஜிஆர் கட்டணத்திற்கான வட்டி தொகையாக ரூ.16,133 கோடியை ஒன்றிய அரசுக்கு வழங்க வேண்டி உள்ளது. இந்த வட்டி நிலுவைத் தொகைக்கு பதிலாக நிறுவனத்தின் பங்குகளை பெற்றுக் கொள்ள ஒன்றிய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் முன்வந்தது. இதற்கு வோடபோன் ஐடியா நிர்வாக குழு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியிடம் வோடபோன் ஐடியா நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில், வட்டி நிலுவைக்கு மாற்றாக பங்குகளை வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக வோடபோன் ஐடியா நிறுவனம் நேற்று அறிக்கை விடுத்தது. இதன்படி, நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ.10 என்ற விலையில் அரசுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 35 சதவீத பங்குகள் ஒன்றிய அரசு வசமாகும். நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராகவும் ஒன்றிய அரசு இருக்கும் என வோடபோன் ஐடியா நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: