மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் இரண்டு போராட்டக் குழுக்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு: மீண்டும் பதற்றம்

 

இம்ப்ஹல்: மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் இரண்டு போராட்டக் குழுக்களுக்கு இடையே மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் இரண்டு இனக்குழுக்களிடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறிய நிலையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சுமார் 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் முதல்வர் பைரன் சிங் ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இரண்டு போராட்டக் குழுக்களுக்கு இடையே மீண்டும் துப்பாக்கிச்சூடு நடந்ததால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுளத்துள். மக்கள் வசிக்கும் பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால் கிராமமே அச்சத்தில் மூழ்கியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு குக்கி இன்பி தென்மேற்கு சதார் ஹில்ஸ் மற்றும் கரம் வைபே கிராம அதிகாரம் ஆகிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து அந்தத் தலைமைப் பழங்குடியின அமைப்பும் கிராம அதிகார அமைப்பும் கூறுகையில், காலை 7 மணி அளவில் அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் கிராம எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, வெடிகுண்டுகளையும் வெடிக்கச் செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்தத் திடீர் வன்முறை கிராம மக்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பெரும் மன உளைச்சலையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளனர்.

Related Stories: