பழைய பாலம் கடும் சேதம் பாம்பன் புதிய பாலத்தில் இனி ரயில்கள் இயங்கும்: மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்

மதுரை: பாம்பன் பழைய ரயில் பாலத்தில் இனி ரயில்களை இயக்க முடியாது. புதிய பாலத்தில்தான் இனி ரயில்களை இயக்க முடியுமென மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார். மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை ரயில் பாதை அமைக்க நிலம் இன்னும் கையகப்படுத்தப்படவில்லை. இதில் ஒரு பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை கொடுத்தால், ரயில் பாதை அமைக்கப்படும். மதுரையின் இரண்டாவது ரயில் முனையமாக கூடல்நகர் ரயில் நிலையம் அமைப்பதற்கு, பயணிகள் சென்று வரவும், சரக்குகளை கையாளவும், சாலை வசதி உள்ளிட்ட போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை.

ராமேஸ்வரத்தை, பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் கடலுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள பாம்பன் ரயில்வே பாலம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பழமையானது.

புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால், இந்த பாலம் பழுதடைந்துள்ளது. சமீபத்தில் புயலில் இந்த பகுதிக்கு சிவப்பு அலர்ட் கொடுக்கப்பட்டது. இதில் பாலம் அதிகளவு சேதமடைந்தது. இதனால் ரயில்வே பொறியாளர்கள் பாலத்தை ஆய்வு செய்து, போக்குவரத்திற்கு இந்த பாலம் பயனற்றது என கூறிவிட்டனர். அதனடிப்படையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புதிதாக கட்டப்பட்டு வரும் பாம்பன் பாலத்தில் மட்டுமே இனிமேல் ரயில்களை இயக்க முடியும். இதுதொடர்பாக ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. ஜூன், ஜூலையில் புதிய பாலத்தின் பணிகள் நிறைவடையும். இதனால், பதிவு செய்து, ராமேஸ்வரத்திற்கு  ரயிலில் செல்லும் பயணிகள் மண்டபம் வரை ரயிலில் சென்று, இதே ரயில்வே பதிவு டிக்கெட்டில், தனி பஸ்சில் ராமேஸ்வரம் அழைத்து செல்லப்படுவார்கள். அதேபோல், அங்கிருந்து பதிவு செய்த பயணிகள் பஸ் மூலம் மண்டபம் வரவழைக்கப்பட்டு, மண்டபத்தில் இருந்து ரயிலில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: