அனைத்து துறையிடமும் ஒப்புதல் பெற்ற பிறகே மெரினாவில் கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு

சென்னை: அனைத்து விதமான ஒப்புதல்களும் பெற்ற பின்னரே கலைஞருக்கு மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு பொதுப்பணி துறை, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மெரினா கடல் பகுதியில் கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தடை கோரியும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகளின் சுற்றுச்சூழல் விதிமீறல்களை ஆராயக்கோரியும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ராம்குமார் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தமிழ்நாடு பொதுப்பணி துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், கலைஞர் நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தூரத்திலும், மெரினா கடற்கரையில் இருந்து கடலுக்குள் 360 மீட்டர் தொலைவிலும் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட உள்ளது. பேனா நினைவு சின்னம் அமைக்க  அனுமதி கோரி ஒன்றிய, மாநில அரசுகளிடமும், கடற்கரை ஒழுங்கு ஆணையத்திடமும் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் பரிந்துரைகள் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் கடந்த 31ம் தேதி நடத்தப்பட்டது. அனைத்து துறைகளிடம் இருந்தும் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே பேனா நினைவு சின்னத்திற்கான பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

Related Stories: