தென்சென்னை கிண்டியில் புதிதாக கட்டப்படும் கிங் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வரும் மே மாதம் பயன்பாட்டிற்கு வரும்: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: கிண்டி கிங் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையான 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய பசுமைக் கட்டிடம் வரும் மே மாதம் பயன்பாட்டிற்கு வரும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை கிண்டியில் அமைந்துள்ள கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம் 1899ம் ஆண்டு நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாதுகாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 ஜூன் 3ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக, மருத்துவமனை கட்டுவதற்காக சுமார் 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு தற்போது பொதுப்பணித்துறையால் மருத்துவமனை கட்டிடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ரூ.230 கோடி செலவில் 5 லட்சத்து 53,582 சதுர அடியில் கட்டப்படுகிறது.

முதல்கட்டமாக, மூன்று பிளாக்குகள் கட்டப்படும் என கூறப்படுகிறது. ஏ பிளாக்கில் ரூ.78 கோடி மதிப்பில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் நிர்வாக கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. பி பிளாக்கில் ரூ.78 கோடி மதிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் கட்டப்பட உள்ளது. சி பிளாக்கில் ரூ.74 கோடி மதிப்பில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு கட்டப்பட உள்ளது.

தற்போது அமைய உள்ள கிண்டி கிங் பன்னோக்கு மருத்துவமனையால் தென் சென்னை பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். நாளொன்றுக்கு சென்னையில் ஒரு லட்சம் பேர் வரை அரசு மருத்துவமனையில் செல்கின்றனர். இதனால் படுக்கைகள், சிகிச்சைகள் என அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. புதிதாக அமைய உள்ள மருத்துவமனையால் கூடுதல் படுக்கைகள் கிடைக்கும், நாளொன்று சிகிச்சை, அறுவை சிகிச்சை எண்ணிக்கைகள் அதிகரிக்கும்  என எதிர்்பார்ப்படுகிறது.  

இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அடித்தளம், தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்கள் கொண்ட கட்டிடம் 3 வெவ்வேறு ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டப்படுகிறது. தற்போது வரை 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 18 மாதங்களில் கட்டிடம் கட்ட திட்டமிட்டிருந்த நிலையில் 14 மாதங்களில் கட்டி முடிக்கப்பட உள்ளது. 2022 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் வரும் மே மாதம் கட்டிடம் முழுமையாக முடிக்கப்பட்டு சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. செப்டம்பர் வரை பணிக்காலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே ஜூன் மாதத்திற்குள்ளாகவே பணிகள் முடிவடைகிற வகையில் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது’’ என்றார்.

Related Stories: