மழையில் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கை: கனமழை காரணமாக சம்பா அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல் கொள்முதல் செய்ய முடியாத காரணத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட 8 லட்சம் ஏக்கரிலான நெற்பயிர் கனமழையில் நனைந்து வீணாகியுள்ளதால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் அளவுக்கு செலவு செய்த நிலையில் மழை காரணமாக பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். எனவே, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை கணக்கீடு செய்தும், தேவையான நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்கவும், கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல்மூட்டைகளை பாதுகாப்பாக மூடி வைக்கவும் உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கான உரிய இழப்பீட்டை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: