மகா சிவராத்திரியை முன்னிட்டு வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு பிரத்யேக வழி ஏற்பாடு: எம்எல்ஏ, அதிகாரிகள் ஆய்வு

பெரம்பூர்: மகா சிவராத்திரியை முன்னிட்டு, வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில், பக்தர்களுக்கான பிரத்யேக வழி ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதனை எம்எல்ஏ ஆர்.டி.சேகர், மாநகராட்சி அதிகாரிகளுடன்  சென்று நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார். வியாசர்பாடியில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரவீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில், வியாசர்பாடி பகுதி மக்கள் மட்டுமின்றி, சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். இங்கு, மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும். இதில், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பது வழக்கம்.

இந்நிலையில், வரும் 18ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. குறிப்பாக, பக்தர்களுக்கு பிரத்யேக வழி ஏற்பாடு செய்வது தொடர்பாக, பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர், சென்னை மாநகராட்சி 4வது மண்டல செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று கோயிலுக்கு வருகை தந்து ஆய்வு செய்தனர். மேலும், கோயிலின் பக்கத்தில் உள்ள இடத்தை தற்காலிகமாக தயார் செய்து, பொதுமக்கள் வெளியேறுவதற்கு அந்த வழியை பயன்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக உடனடியாக அந்த கோயிலின் பின்புறத்தில் பாதை அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஆர்.டி.சேகர் எம்எல்ஏ கூறுகையில், ‘‘மகா சிவராத்திரியை முன்னிட்டு, வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலுக்கு, அதிகப்படியான பொதுமக்கள் ஒரே நேரத்தில் வருகை தருவார்கள் என்பதால், கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, கோயிலின் பக்கத்தில் உள்ள இடத்தை தற்காலிகமாக சுத்தம் செய்து, பொதுமக்கள் வெளியே வர மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், மகா சிவராத்திரி அன்று பொதுமக்கள் தங்கு தடையின்றி செல்லவும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மருத்துவ உதவிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட உள்ளன’’ என்றார். ஆய்வின்போது, திருக்கோயில் செயல் அலுவலர் ஆட்சி சிவப்பிரகாசம், கோயில் அலுவலர் தனசேகர், நந்தகுமார், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: