சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர் மொபட் திருட்டில் ஈடுபட்டு வந்த சிறுமி கைது: 4 மொபட்டுகள் பறிமுதல்; சிசிடிவி காட்சி வைரல்

தண்டையார்பேட்டை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மொபட் திருட்டில் ஈடுபட்டு வந்த சிறுமியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 மொபட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறுமி மொபட் திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வண்ணாரப்பேட்டை காட்பாடா பகுதியயை சேர்ந்தவர் ஷெரீப் (38). இவர், தனது மொபட் திருடு போனதாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதில், இளம்பெண் ஒருவர் மொபட்டை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

அதை வைத்து விசாரித்தபோது, சென்னை சென்ட்ரல் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி மொபட்டை திருடியது தெரியவந்தது. அந்த சிறுமியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், மொபட் ஓட்ட வேண்டும் என்ற ஆசையில், கள்ளச்சாவி போட்டு பல இடங்களில் மொபட்டுகளை திருடிசென்று ஆசை தீர ஓட்டிவிட்டு, பெட்ரோல் தீர்ந்தால், அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமி கூறிய இடங்களான பெரும்பாக்கம், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, மாடல்லைன் உள்ளிட்ட இடங்களில் நின்றிருந்த 4 மொபட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த சிறுமியை, புரசைவாக்கத்தில் உள்ள அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அந்த சிறுமி மொபட்டுகளை திருடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: