கல்விச்சுற்றுலாவாக ஐக்கிய அரபு நாடான துபாய்க்கு செல்லும் மாணவர்களுக்கு பாராட்டிச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார் மேயர் ஆர்.பிரியா

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் Wings to Fly திட்டத்தின் மூலம் 2022-2023ம் கல்வியாண்டில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்று கல்விச்சுற்றுலாவாக ஐக்கிய அரபு நாடான துபாய்க்கு செல்லும் மாணவர்களை  மேயர் ஆர்.பிரியா இன்று (03.02.2023) பாராட்டிச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, கல்வித்துறையானது Rotary Club of Madras East, Wings to Fly (W2F) அமைப்பின் வாயிலாக கடந்த 7 வருடங்களாக 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் சென்னை பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியரை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்து சென்று வருகின்றனர். இதில் 2016ஆம் ஆண்டு மலேசியாவிற்கும், 2017ஆம் ஆண்டு ஜெர்மனிக்கும், 2018ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள NASAவிற்கும், 2019ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கும், 2022ஆம் ஆண்டு லண்டன் நகருக்கும் கல்விச்சுற்றுலா சென்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2020 மற்றும் 2021ஆம் ஆண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடு அழைத்து செல்ல இயலாத காரணத்தினால், அவர்களின் சாதனையை பாராட்டி மடிக்கணினிகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, 2022-2023-ம் கல்வியாண்டில் Wings to fly திட்டத்தின் மூலம்  சென்னை பள்ளிகளில் “தொழில் முனைவோர் திறன் மேம்பாடு” (Development of Entrepreneurial Ability)  என்ற தலைப்பில் மூன்று நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. முதல் சுற்றில் பள்ளி அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 478 மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 மாணவர்களுக்கு இறுதிச் சுற்றுக்கான போட்டிகள் 25.01.2023 அன்று நடத்தப்பட்டது.  இதில் 8 மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்றனர்.  வெற்றி பெற்ற மாணவர்களை கல்விச்சுற்றுலாவாக ஐக்கிய அரபு நாடான துபாய்க்கு 2023ம் ஆண்டு மே மாதம் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை பள்ளிகளில் Wings to Fly திட்டத்தின் மூலம் 2022-2023ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று கல்விச்சுற்றுலாவாக ஐக்கிய அரபு நாடான துபாய் செல்லும் 8 மாணவ, மாணவியரை மேயர் ஆர்.பிரியா இன்று (03.02.2023) பாராட்டிச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

* துபாய் செல்லும் மாணவ, மாணவியரின் விவரம்

ஆர். விஷால் -11ஆம் வகுப்பு (சென்னை மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம்),  ஏ. மைதிலி- 9ஆம் வகுப்பு (சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  புல்லா அவென்யூ), எம்.லோக்பிரியன் 11ஆம் வகுப்பு (சென்னை மேல்நிலைப்பள்ளி, வேளச்சேரி),  இ.ஆர்.வர்ஷினி-11-ம் வகுப்பு (சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை), பி. திவ்யதர்ஷினி - 9-ம் வகுப்பு (சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மார்க்கெட் தெரு) ஏ. முகேஷ் - 11-ம் வகுப்பு (சென்னை மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம்), டி. கிஷோர் - 11-ம் வகுப்பு (சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நுங்கம்பாக்கம்), ஆர். பிரத்யங்கா -11-ம் வகுப்பு (சென்னை மேல்நிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர். நகர்)   

இந்நிகழ்ச்சியில்  துணை மேயர் மு.மகேஷ் குமார் , முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, நிலைக்குழுத் தலைவர்  (கல்வி), த.விஸ்வநாதன்,  Rotary Club of Madras East தலைவர் டி.வி.ராமகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: