மெரினா கடற்கரையில் கலைஞருக்கு நினைவிடம் அமைப்பதில் விதிமீறல் இல்லை: தமிழ்நாடு அரசு பதில்

சென்னை: மெரினா கடற்கரையில் கலைஞருக்கு நினைவிடம் அமைப்பதில் விதிமீறல் இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அருகே கடலுக்கு மத்தியில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இயல், இசை, நாடகம் என்ற மூன்று வித தமிழ் இலக்கியங்களுக்கும் கலைஞர் கருணாநிதி தனது எழுத்தாற்றல் மூலமாக ஆற்றியுள்ள தொண்டின் நினைவாக பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் கட்ட தடை கோரியும்,  ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகளின் சுற்றுச்சூழல் விதிமீறல்களை ஆராயக்கோரியும் ராம்குமார் ஆதித்யன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதற்கு  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி ஒளிபரப்பு துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில்,  கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் விதிகளின் படி கட்டுமான பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர ஒழுங்குமுறை சட்டத்தின் படி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அண்ணா நினைவிடத்திற்குள்தான் கலைஞரின் நினைவிடம் அமைந்துள்ளதால்  அதில் எந்த விதிமீறலும் இல்லை என பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. கலைஞருக்கு நினைவிடம் அமைக்க பொதுமக்களிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை எனவும் தமிழ்நாடு அரசு பதில் அளித்தது.

Related Stories: