திருமலை: ஐதராபாத்தில் வரும் 17ம் தேதி திறக்கப்பட இருந்த புதிய தலைமை செயலகத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் புதிய தலைமைச்செயலகத்தை அரசு கட்டியுள்ளது. இந்த கட்டிடம் முதல்வர் சந்திரசேகரராவின் பிறந்தநாளான வரும் 17ம் தேதி திறக்கப்பட இருந்தது. கட்டிடத்தில் ஒரு சில மர வேலைப்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கட்டிடத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தலைமை செயலகத்தின் வாசலில் அடர்ந்த தீ பரவியது. தீ கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சில மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.
எந்த மாடியில் தீ விபத்து ஏற்பட்டது தீவிபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்படவில்லை.முன்னதாக தீ விபத்து குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்காமல்,‘இது ஒரு பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை’ என தலைமை செயலகப்பாதுகாப்பு பணியாளர்கள் கூற முயன்றனர். பின்னர்தான் அது தீ விபத்து என கண்டறியப்பட்டது.இதற்கிடையில், பாஜக மாநில தலைவரும் எம்பியுமான பண்டி சஞ்சய் குமார் கூறியதாவது: புதிய தலைமை செயலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது வருத்தமளிக்கிறது. தரமற்ற பணியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தனது பிறந்தநாளில் தலைமைச் செயலகத்தை தொடங்க முதல்வர் கே.சி.ஆர் அவசர அவசரமாக எடுத்துள்ள நடவடிக்கைகளே இந்த நிலைக்கு காரணம். புதிய செயலகத்தை பிப்ரவரி 17ம் தேதி தொடங்கும் முடிவை தள்ளி வைக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளில் புதிய தலைமை செயலகம் திறக்கப்பட வேண்டும். தீ பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வகையான பணிகளையும் சரிபார்த்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.