தூத்துக்குடி மாவட்டத்தில் பரந்து விரிந்த செம்மண் தேரியில் கனிமவள தொழிற்சாலை அமைவது வரமா? சாபமா?

உடன்குடி: இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் செம்மண் தேரியில் அமையவிருக்கும் கனிமவள தொழிற்சாலை, இந்த பகுதி மக்களின் வளர்ச்சிக்கு உதவுமா? வரப்பிரசாதமா? சாபமா? என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்து சிவப்பு கம்பளம் விரித்தாற்போல் காணப்படும் செம்மண் தேரியில் ஏராளமான கனிம வளங்கள் கொட்டிக் கிடக்கிறது. செம்மண் மேடுகள், மணல் குன்றுகளும் நிறைந்து காணப்படுவது தேரிக்காடு.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், சாத்தான்குளம், சாயர்புரம் பகுதிகளில் செம்மண் தேரிக்காடுகள் பல ஏக்கர் உள்ளது. இதில் திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதியிலுள்ள தேரிக்காட்டு செம்மணலுக்கென்று பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. நிமிடத்துக்கு நிமிடம் தேரிக்காட்டில் காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பதால், தேரிக்காட்டில் திசை கண்டுபிடித்துச் செல்வது மிகவும் சிரமம். கற்கள் எதுவும் இல்லாமல், ஏறக்குறைய மாவு போன்ற பதத்தில் நைசாகக் காணப்படும் இந்த நிலத்தில் நடந்தால், கால்கள் அரை அடி அளவுக்காவது பூமியில் புதைந்துவிடும்.

இதில் ஆச்சரியம் என்ன என்றால், அங்கே இருப்பது போன்ற செக்கச் செவேல் என்ற மணல் பகுதி, மாவட்டத்தின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படவில்லை என்பது தான்.

இந்த தேரிக்காட்டில் மணல் மேடுகள் சுமார் 40 அடிக்கு மேல் காணப்படும். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடமும் முல்லை, வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல், வெறும் மணல் பிரதேசமாக இருப்பது பாலை. இந்த ஐந்து வகை நிலமும் ஒரே பகுதியில் இருப்பது அபூர்வம். ஆனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமே இந்த வகை நிலங்களும் ஒரு சேர அமைந்துள்ளதை காணலாம்.

செம்மண் தேரிகள் குதிரைமொழி, நாசரேத், அரசூர், நடுவக்குறிச்சி, தட்டார்மடம், உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது. தென்மேற்கு சுழல் காற்றால் இந்தப் பகுதியின் மணல் இடம் மாறுகிறது. அப்போது, அங்குள்ள மரங்கள், வயல்வெளிகள், ஏன், சில கிராமங்களைக் கூட கால ஓட்டத்தில் அந்த மணல் மூடிவிடுகிறது என்று இங்கே ஆய்வு நடத்திய கால்டுவெல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியானால் இந்த அதிசய மணல் மேடு எப்படித் தோன்றியது? வேறு எங்குமே இல்லாத வகையிலான மணல் எங்கு இருந்து எப்படி வந்தது? என்பது போன்ற வினாக்கள் இன்னும் விடைதெரியாத புதிராகவே இன்றளவும் இருக்கின்றன.

தேரியின் செம்மண், கரிசல் மண்ணைப் போலன்றி ஈரத்தை வெகுநேரம் தக்கவைக்க இயலாதது. நீர்ப்பிடிப்பு இல்லாத பகுதி என்பதால் தேரிக்காட்டில் பனைமரம், உடைமரங்கள், கருவேலம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் அதிகளவில் வளர்கின்றன. தேரிக்காட்டில் மயில், அபூர்வமான பறவைகள், பாம்பு வகைகள் மிகுந்து காணப்படுகின்றன. மேலும் தேரிக்காட்டில் அதிகளவில் பனைமரங்கள் அடர்ந்து காணப்படும். இதில் பனை சார்ந்த தொழில்கள் அதிகளவில் நடந்து வருகிறது. இந்த செம்மண் தேரியில் கார்னெட், இல்மனைட், இரூட்டைல், சிர்கான் உள்ளிட் விலை மதிக்க முடியாத தாதுவளங்கள் கொட்டிக்கிடக்கிறது. இங்கு தான் டைட்டானியம் கிடைக்கின்றது என்று டாடா நிறுவனத்தினர் கடந்த 2007ல் இப்பகுதியில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது. அப்போது பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது தேரிக்காட்டு பகுதியில் அமையவிருக்கும் கனிமவளங்கள் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை திட்டங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் பொதுமக்களிடையே பரவி வருகிறது.

இதுகுறித்து இந்துமுன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் கூறுகையில்:

 தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 52 மில்லியன் டன் தேரிமணல் இருப்பு உள்ளது. இதிலிருந்து கனிமங்களைப் பிரித்தெடுக்கும் 2 தொழிற்சாலைகளை குதிரைமொழி, சாத்தான்குளம் பகுதிகளில் ரூ.1500 கோடி முதலீட்டில் நிறுவி தலா ரூ.1075 கோடி வருவாய் ஈட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கும், ஒன்றிய அரசின் ஐஆர்இஎல் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இரு பகுதிகளிலும் உள்ள தேரிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

இப்பகுதிகளில் மணல் எடுப்பதன் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்திலேயே நிலத்தடி நீர்மட்டம் உடன்குடி ஒன்றியத்தில்தான் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக ஒன்றிய நிலத்தடிநீர் மேம்பாட்டு வாரியம் எச்சரித்துள்ள நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் இப்பகுதி முழுவதும் பாலைவனமாக மாறுவதோடு முழுமையாக விவசாயம், அதன் சார்பு தொழில்கள் என அனைத்தும் அழிந்து போகும். எனவே இயற்கையையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் இத்திட்டத்தை அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும், என்றார்.

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்

பிஇ பட்டதாரியும், சுயதொழில் செய்து வருபவருமான ராஜ்குமார் கூறுகையில், நாட்டின் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை தீட்டியும், தொழில் வளத்தை பெருக்க பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தற்போது ஏராளமான படித்த இளைஞர்கள் தங்கள் படிப்பு தகுதிக்கு ஏற்றார் போல் வேலைவாய்ப்புகள் இல்லாமல் திணறி வருகின்றனர்.

உடன்குடி பகுதியைச் சுற்றி அனல்மின் நிலையம், துறைமுகம், ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடந்து வரும் வேளையில் தற்போது கனிமவள தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த பகுதி மக்கள் பாதிக்கபடாத வண்ணம், இயற்கை வளங்கள் சுரண்டாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். மேலும் தொழிற்சாலைகளில் பணியாற்றிட இப்பகுதி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related Stories: