ஆசிரியர் கி.வீரமணியின் சமூகநீதி விழிப்புணர்வு பயணம் வெற்றி பெறட்டும்: வைகோ வாழ்த்து

சென்னை: ஆசிரியர் கி.வீரமணியின் சமூகநீதி விழிப்புணர்வு பயணம் வெற்றி பெறட்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; அறிஞர் அண்ணா அவர்களின் நினைவுநாளான இன்று, தந்தை பெரியார் பிறந்த ஈரோடு நகரில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்கள் சமூகநீதி விழிப்புணர்வு பிரச்சார தொடர் பயணம் மேற்கொள்வதை அறிந்து அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

ஈரோடு முதல் கடலூர் வரை 40 நாட்கள் பயணம் செய்து, 80க்கும் அதிகமான பொதுக்கூட்டங்களில் ஆசிரியர் அவர்களும், திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்களும் கலந்துகொண்டு நம் திராவிட இயக்க இலட்சியங்களை விளக்கி உரையாற்றி, புதிய மறுமலர்ச்சியை - எழுச்சியை உருவாக்கும் அரும்பணியை மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வரவேற்று வாழ்த்துகிறேன். விழிப்புணர்வுப் பிரச்சாரக் கூட்டங்களில் ஆங்காங்கு உள்ள மறுமலர்ச்சி தி.மு.க. தோழர்கள் கலந்துகொண்டு, திராவிடர் கழக செயல்வீரர்களை வரவேற்று சிறப்பு செய்வார்கள்.

90 வயதிலும், 20 வயது இளைஞராய் களத்தில் நின்று தொண்டறம் தொடரும் நம் ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்களின் இலட்சியப் பயணம் வெற்றிபெற என் வாழ்த்துகளை கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: