நவீன தொழில்நுட்பம் மூலம் கற்றலை மேம்படுத்த உலக பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைப்பு: ஜி20 கல்வி மாநாட்டில் முடிவு

சென்னை: நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கற்றலை மேம்படுத்த உலகம் முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களோடு ஒத்துழைப்பு நல்குவது என ஜி20 கல்வி மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒன்றிய உயர்கல்வி துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி, ஒன்றிய பள்ளி கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் ஆகியோர் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் ஜி20 கல்விப் பணிக்குழுவின் சார்பில் நடந்த இரண்டு நாள் கருத்தரங்கு மற்றும் கூட்டம் நேற்று முடிவடைந்தது. முதலாவது நாள் கூட்டத்தில், 30 நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பு நாடுகளை சேர்ந்த 80 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  

அனைவரையும் உள்ளடக்கிய சமமான பொருத்தமான, தரமான கல்வி மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை வழங்குவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், 3 கல்வி பணிக்குழுக்கள் கூட்டம் நடக்க உள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் நடக்க உள்ள கடைசி கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட் பங்களை பயன்படுத்தி கற்றலை மேம்படுத்த உலகம்  முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களோடு இந்தியா தனது ஒத்துழைப்பை நல்குவதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன. பள்ளி அளவில் எழுத்தறிவை வலுப்படுத்தும் வழிமுறைகள், கல்வியை வலுப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஆகிய இரண்டு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

உறுப்பு நாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை தெரிந்துகொள்ளும் தளமாக இந்த கல்வி பணிக்குழு விளங்குவதாக ஜி20 பிரதிநிதிகள் கூட்டத்தில் தெரிவித்தனர். நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கற்றலை மேம்படுத்த உலகம் முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களோடு ஒத்துழைப்பு நல்குவது தொடர்பான முடிவுகள் மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய கல்விக் கொள்கையின் கீழ் 50 சதவீத பள்ளிக் குழந்தைகள் வரும் காலத்தில் திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆவணப்படுத்தப்பட்டு அதன் மீதான விவாதம் அமிர்தசரஸ் நகரில் மார்ச் 15ம் தேதி முதல் நடக்க உள்ள கூட்டத்தில் முன்வைக்கப்படும். வரும் செப்டம்பரில் நடக்கும் ஜி20 உச்சிமாநாட்டின் நிகழ்ச்சியில் 56க்கும் மேற்பட்ட ஜி20 கூட்டங்கள் நாட்டில் நடத்தப்படும் என்றார்.

Related Stories: