நாடாளுமன்ற துளிகள்...

* 78 துறைகளில் 9.79 லட்சம் வேலை காலி

மாநிலங்களவை கேள்வி நேரத்தில் பாஜ எம்பி சுஷில் குமார் மோடி எழுப்பிய வேலை வாய்ப்பு குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஒன்றிய அரசு பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிஜேந்திர சிங், ``ரயில்வேயில் 2.93 லட்சம், பாதுகாப்பு துறை 2.64 லட்சம், உள்துறை 1.43 லட்சம் உள்பட 78 அமைச்சகங்களில் 9.79 லட்சத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன,’’ என்று தெரிவித்தார்.

* நினைவு சின்னங்களை பாதுகாக்க ரூ.260 கோடி

ஒன்றிய கலாசார அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ``தமிழ்நாட்டில் உள்ள 412, கர்நாடகாவில் 506, உபி.யில் 743 உள்பட நாடு முழுவதும் தொல்லியல் துறையின் கீழ் 3,696 நினைவு சின்னங்கள் ஒன்றிய அரசினால் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றை பாதுகாக்க, பராமரிக்க கடந்த 2021-22ம் ஆண்டில் அரசு ரூ.270 கோடி செலவிட்டுள்ளது. கடந்த 2019-20 மற்றும் 2020-21ம் ஆண்டுகளில் முறையே ரூ.430 கோடி, ரூ.260 கோடி செலவிடப்பட்டுள்ளது,’’ என்று கூறினார்.

* இந்தியாவில் 94.50 கோடி வாக்காளர்கள்

ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 94.50 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று ஒன்றிய அரசு மாநிலங்களவையில் தெரிவித்து உள்ளது.

ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு இதுதொடர்பாக அளித்த பதில்: இந்திய தேர்தல் ஆணைய தகவல்களின்படி 2023 ஜனவரி 1 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் இறுதி தகவல்படி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 94,50,25,694 ஆகும். 1951ல் இந்தியாவில் 17.32 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.  2019 ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது ​​இந்தியாவில் 91.20 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

* உச்ச நீதிமன்றத்தின் வேலைநாட்கள் அதிகரிப்பு?

ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: உச்ச நீதிமன்றம் ஒரு வருடத்தில் சராசரியாக 222 நாட்கள் வேலை செய்கிறது. நீதிமன்றங்களின் வேலை நேரம், வேலை நாட்கள் மற்றும் விடுமுறைகள் ஆகியவை அந்தந்த நீதிமன்றங்களால் உருவாக்கப்பட்ட விதிகளின்படி பரிந்துரைக்கப்படுகின்றன. நீதிமன்றத்தின் அமர்வுகள் மற்றும் விடுமுறைகளை உள்ளடக்கிய நடைமுறைகளை ஒழுங்குபடுத்துகிறது.  நீதிமன்றங்களுக்கான குறைந்தபட்ச கட்டாய வேலை நேரம் மற்றும் வேலை நாட்களை நிர்ணயிப்பதில் ஒன்றிய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. மேலும், உச்ச நீதிமன்றத்தின் வேலை நாட்களையோ அல்லது வேலை நேரத்தையோ அதிகரிக்க எந்த முன்மொழிவும் தற்போது இல்லை. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

Related Stories: