எடப்பாடி கேட்டால் கையெழுத்து பாஜவுடன் முறையான அறிவிப்பு: ஓபிஎஸ் புது குழப்பம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய அரசின் பட்ஜெட் அனைத்து நிலையிலும் இந்தியாவை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் சிறப்பானதாக உள்ளது. பட்ஜெட்டின் சாராம்சத்தை புரிந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து, பட்ஜெட் அறிக்கையின் விரிவான பதிலில் தகவல்கள் இடம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை (இன்று) விசாரணைக்கு வருகிறது. அதிமுக சட்ட விதிப்படி நடந்த அமைப்புரீதியான தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். எங்களின் பதவிக்காலம் 2026 வரை உள்ளது. இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என்று அவர்கள் (எடப்பாடி) கேட்டு வந்தால் அதில் கையொப்பமிடுவேன். அத்துடன், சசிகலாவை விரைவில் சந்திப்பேன். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான முறையான அறிவிப்பை நானும், பாஜ தலைமையும் விரைவில் தெரிவிப்போம். அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் பாஜவும், அதிமுகவும் ஒன்றுபட வேண்டும் என விரும்புகின்றனர். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

* துணை ராணுவம் 20ம் தேதி வருகை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலுக்கான பாதுகாப்பு பணிக்காக போலீசார் மட்டுமின்றி, துணை ராணுவத்தினர் (மத்திய ரிசர்வ் படை) 5 குழுக்களை சேர்ந்த 400 பேர் வருகிற 20ம் தேதி வர உள்ளனர். இவர்கள் வாக்குப்பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகள் வரும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: