ரூ.12.49 கோடி கோயில் நிலம் மோசடி சென்னை தம்பதி, புதுவை விஏஓ கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.12.49 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்து விற்றது தொடர்பாக சென்னை தம்பதி, புதுவை விஏஓ உட்பட 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி நகரின் மையப் பகுதியான பாரதி வீதியில் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமாக ரூ.12 கோடியே 49  லட்சத்து 52 ஆயிரம் மதிப்புள்ள விவசாய நிலம் உள்ளது. இதனை போலி ஆவணங்கள் தயாரித்து சிலர் அபகரித்து விட்டதாக கோயில் அறங்காவலர் குழு செயலர் சுப்பிரமணியன் சிபிசிஐடி போலீசில் கடந்த ஆகஸ்டு 30ம் தேதி புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்குப்பதிந்து ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். விசாரணையில் சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த ரத்தினவேல் (54), அவரது மனைவி மோகனசுந்தரி (49), குன்றத்துரை சேர்ந்த மனோகரன் (53), புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற விஏஓ சின்னராசு (எ) பழனி (73) ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்தது தெரியவந்தது. அன்னை நகர் விரிவாக்கம்-(1) என்ற பெயரில் மனைகளாக பிரித்து, பல்வேறு நபர்களுக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். 

Related Stories: