கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 350 மாநகர பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: புதியதாக திறக்கப்பட  உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை மாநகரின்  பெரும்பாலான பகுதிகளை இணைக்கும் வகையில் 350 பஸ்கள இயக்கப்படும் என்று  எம்டிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் அதிகரித்து வந்த போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, பிராட்வேயில் செயல்பட்டு வந்த பேருந்து நிலையத்தை மாற்றி, கோயம்பேட்டில் மிகப்பெரிய அளவில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. கோயம்பேட்டிலும் நெரிசல் அதிகரித்ததால், இப்பிரச்னைக்கு தீர்வாக, கிளாம்பாக்கத்தில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டுவதற்கு அரசு முடிவு செய்தது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பில் பேருந்து முனையம் கட்டப்பட்டு, வரும் 15ம் தேதி திறக்கப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவித்துள்ளது.

எஃகு குவிமாடம் அமைக்க கால தாமதம் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. சிஎம்டிஏ கட்டுமான முறையை மாற்றியதனால் உயரமான கட்டமைப்புகள் கொண்டுவர முடிவு செய்துள்ளனர். உயரமான கட்டமைப்புகள் உருவாக்குவதற்கு, கிட்டத்தட்ட 18 மீட்டர் உயரத்தில் டெர்மினல் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு மேல் இருப்பது போல கட்டப்படுகிறது. இடையில், பிரதான முனைய கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஆதரவுகள் வழங்கப்பட வேண்டும். இப்பணி விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு விரைவு, சொகுசு பேருந்துகள் புறப்பட்டு செல்லவும், சென்னை நோக்கி வரும் பஸ்கள் கிளாம்பாக்கத்திலேயே நிறுத்தப்படும். பின்னர், அங்கிருந்து சென்னை நகருக்குள் பயணிகள் எளிதாக வரும் வகையில், மாநகர பஸ்களை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: கிளாம்பாக்கம் புது பேருந்து நிலையம் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பணிகள் விரைவில் முடிய உள்ள நிலையில், அங்கிருந்து விரைவு, மாநகர இணைப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்கான, பணிமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையில் பெரும்பாலான பகுதிகளை இணைக்கும் வகையில் 350 இணைப்பு மாநகர பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான, வழித்தட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பிராட்வே, கோவளம், எண்ணூர், திருவொற்றியூர், பூந்தமல்லி, கோயம்பேடு, செங்குன்றம், அடையார், வேளச்சேரி, மாமல்லபுரம், மெரினா கடற்கரை, உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் தேர்வு செய்துள்ளோம். பயணிகளின் தேவை அதிகரிக்கும் போது மாநகர பேருந்துகளை அதிகரித்து இயக்குவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

என்னென்ன வசதிகள்

இந்த பேருந்து நிலையத்தில் ஒரே  நேரத்தில் 215 பேருந்து நிறுத்தங்கள் அமையவுள்ளன. அதில் 130 அரசு பேருந்து,  85 தனியார் பேருந்து நிறுத்தங்களும் உள்ளடக்கமாகும். 3.99 ஏக்கர்  பரப்பளவில் 300 பேருந்துகள் துணை உறைவிட நிறுத்தமிடம், 1.99 ஏக்கர்  பரப்பளவில் 275 தானுந்துகள், 3582 இரு சக்கர வாகன நிறுத்தம், தாய்மார்கள் அறை, மருத்துவ மையம், மருந்தகம், இரண்டு சரக்கு அறை, பொருள்வைப்பு அறை மற்றும் ஏடிஎம். 100 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் தங்க தனித்தனி விடுதி, 340 ஓட்டுனர்களுக்கு இடமளிக்க 4 ஓட்டுனர் விடுதி. தரை தளத்தில் 4 கழிவறை ஆகியவை அமைய உள்ளன.

Related Stories: