மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்களின் லாரிகள் அனைத்தும் வழக்கம்போல் ஓடும்: சில தனிநபர்களிடமிருந்து தொழிலை காக்க முதல்வருக்கு கத்திப்பாரா ஜெ.விவேக் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் கத்திப்பாரா ஜெ.விவேக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் போற்றும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு, தங்கள் பொற்கால ஆட்சியில் அனைத்து தரப்பு தொழில்களும் சிறப்பான முறையில் செயல்படுவது போன்று, தாங்கள் முன்னெடுக்கும் பல உள்கட்டமைப்பு திட்டங்களால் எங்கள் லாரி மற்றும் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்களின் தொழிலும் சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சங்கங்கள் என்ற பெயரில் சில தனி நபர்கள், அவர்களின் சுய லாபத்திற்காக அதிக பாரம் பிரச்னையை காரணம் காட்டி அடிக்கடி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிக்கின்றனர். வேலை நிறுத்தத்தை தவிர்த்து அரசு நிர்ணயித்த சரியான பாரத்தை ஏற்றி செயல்படும் லாரிகளையும் வேண்டுமென்றே குண்டர்களை வைத்து அடாவடி செய்து அச்சுறுத்தி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற செயல்களால் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் செயற்கையான கட்டுமான பொருட்களின் விலை ஏற்றமும், லாரி உரிமையாளர்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது.

அதிக பாரம் பிரச்னைகளை கையாள தமிழக அரசின் போக்குவரத்துறை மற்றும் காவல்துறை இருக்கிறது. இருந்த போதும் சில தனி நபர்கள், சங்கங்கள் என்ற பெயரில் சுயலாபத்திற்காக இந்த பிரச்னையை கையில் எடுத்து அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி லாரி தொழிலை முடக்குகின்றனர். எனவே, லாரி மற்றும் மண் அள்ளும் இயந்திர தொழிலை அடிக்கடி வேலை நிறுத்தம் என்ற பெயரில் முடக்கும் மேற்குறிப்பிட்ட சில தனிநபர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். எங்கள் சங்கத்தை சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தொடர்ந்து வழக்கம்போல் ஓடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: