உலக ஈரநில தினத்தை முன்னிட்டு பள்ளிக்கரணை ராம்சார் தளத்திற்கு அடையாள சின்னம்: அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்

சென்னை: உலக ஈரநில தினத்தை முன்னிட்டு பள்ளிக்கரணை ராம்சார் தளத்திற்கு அடையாள சின்னத்தை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். பள்ளிக்கரணை சதுப்பு நில பூங்கா வளாகத்தில் நேற்று, உலக ஈரநில தினத்தை முன்னிட்டு பள்ளிக்கரணை ராம்சார் தளத்திற்கான அடையாள சின்னத்தை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில்    வேளச்சேரி எம்.எல்.ஏ ஹசன் மௌலானா, சுற்றுச்சூழல், காலநிலை   மாற்றம்   மற்றும் வனத்துறை கூடுதல் செயலாளர் சுப்ரியா  சாஹு, தலைமை வனப் பாதுகாவலர்கள் சுப்ரத் மஹாபத்தர, மித்தா பானர்ஜி, சீனிவாஸ் ரா ரெட்டி, தீபக் ஸ்ரீவத்சவா, சென்னை மண்டல வனப் பாதுகாவலர் கீதாஞ்சலி, பசுமை தமிழ்நாடு இயக்கம் கூடுதல் இயக்குநர் ராகுல்,  சென்னை வன உயிரின காப்பாளர் பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது: தமிழ்நாடு ஈரநில ஆணையம் தமிழ்நாட்டில்  உள்ள 100 ஈரநிலங்களின் சூழலியலை  மீட்டெடுக்கும்  வகையில் ரூ.115.50  கோடியில் திட்டங்கள் வகுக்கப்பட்டு  ஈரநிலங்களின் சூழலியலை மீட்டெடுக்கும் நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. அவ்வகையில் கோவளம் அருகில் பக்கிங்காம் கால்வாய் சங்கமிக்கம்  இடத்தில்  சூழலியல் மீட்டெடுப்பு நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது.  அதே  போன்று, வண்டலூர் ஓட்டேரி ஏரி, எண்ணூர் கடல்  மற்றும் குசஸ்தலை ஆறு  சங்கமிக்கும் இடம் மற்றும் இதர ஈரநிலங்களும் கண்டறியப்பட்டு மீட்டெடுப்பு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள மொத்தம் 75 ராம்சார் தளங்களில் நமது தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 14 ராம்சார் தளங்கள் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் அதிக எண்ணிக்கையிலான ராம்சார் தளங்கள் ஒரு மாநிலத்தில் மட்டும் உள்ளது என்பதால் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் முதன்மை பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளது. அத்துடன் ஈரநில  ஆணையம் ஏற்படுத்தப்பட்டு 13 ஈரநிலங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத சாதனை என்பதுடன் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உள்ளூர் சமூகம் சார்ந்த மற்றும் நம்மாநிலத்தின் நலன் கருதி தமிழ்நாடு ஈரநில ஆணையம் மூலம் திட்டங்கள் வகுக்கப்பட்டு ஈரநிலங்கள் மீட்டெடுப்பது மற்றும் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும் விதமாகவும், நிலத்தடிநீர் சேமிப்பு,  தண்ணீர் சுத்திகரித்தல், வறட்சி மற்றும் வெள்ளக்காலங்களில் தடுப்பு அரணாகவும், மீன்பிடித்தல், பல்லுயிர் பரவல் மற்றும் பாதுகாப்பு சுற்றுச்சூழல் காலநிலை தாக்கத்தை மட்டுப்படுத்தும் விதமாகவும், செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

இவ்வியக்கத்தின்கீழ், ஈரநில நண்பர்கள் குழு உருவாக்கப்பட்டு இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன்படி ஈரநில நண்பர்கள் குழு பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் இதுவரை 63 குழுக்கள் இணைக்கப்பட்டுள்ளது.   மேலும் 250 ஈரநில நண்பர்கள் குழு மாநிலத்தின் அனைத்து ஈரநிலங்களிலும் இன்று முதல் இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்வரும் நாட்களில் அரசினால் கூடுதல் எண்ணிக்கை ஈரநில நண்பர்கள் குழு உருவாக்கப்பட்டு அவர்களின் செயல்கள் ஊக்கப்படுத்தப்பட்டு ஈரநிலங்கள் மீட்டெடுக்கும் வகையில் பங்கெடுக்க தமிழ்நாடு ஈரநில ஆணையம் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: