அதிமுக தலைமையில் தான் கூட்டணி; நாங்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம்: பாஜவுக்கு மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று புகார் மனு அளித்தார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 238 பூத் உள்ளது. இந்த 238 பூத்களிலும் அதிமுகவை சேர்ந்த பொறுப்பாளர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்யும்போது கிட்டதட்ட 40 ஆயிரம் வாக்காளரின் பெயர் பட்டியலில் பெயர் இல்லை. இதுகுறித்து  தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்ட பேனர் அடிப்பதற்கான பிரின்ட் செய்யும்போது முற்போக்கு என்று வந்துவிட்டது. பின்னர் சரியான பேனர் வைக்கப்பட்டது. இது ஒரு பிரச்னையே இல்லை. அண்ணாமலை டெல்லி சென்ற பிறகுதான் அது மாற்றப்பட்டது என்று கூறுவது தவறு. எங்கள் கட்சி உள்விவகாரங்களில் என்றைக்கும் பாஜ தலையிட்டது கிடையாது. எங்களை பொறுத்தவரையில் பெயரில் சிறிய பிழை இருந்தது. பின்னர் சரி செய்யப்பட்டது. பேனரில் ஒரு படத்தை வைக்கப்படவில்லை என்பதால் அவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று கூற முடியாது.

கண்டிப்பாக கூட்டணி தர்மத்தின்படி தான் செயல்படுவோம். தமிழகத்தை பொறுத்தவரையில் எங்கள் தலைமையில்தான் கூட்டணி. இந்த கூட்டணி என்பது இன்றைக்கும் தொடர்கிறது. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.அதிமுகவை பொறுத்தவரையில் நாங்கள் பாஜ ஆதரவை கேட்டுள்ளோம், அவர்கள் தேசிய கட்சி. உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்கள். பதிலை உடனே சொல்லுங்கள் என்று வற்புறுத்த முடியாது. நாங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவோம் என்று அறிவித்து, வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். முன்வைத்த காலை பின்வைப்பதில்லை.

Related Stories: