வள்ளலார் சர்வதேச மைய வடிவமைப்பு தொடர்பான திட்ட வரைவு சமர்ப்பிப்புக் கூட்டம்: அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேகர்பாபு ஆகியோர் பங்கேற்பு

சென்னை: வள்ளலார் சர்வதேச மைய வடிவமைப்பு தொடர்பான திட்ட வரைவு சமர்ப்பிப்புக் கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இன்று (01.02.2023) இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் வள்ளலார் சர்வதேச மைய வடிவமைப்பு தொடர்பாக நடைபெற்ற திட்ட வரைவு சமர்ப்பிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கினார்கள்.

2021-2022ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் அறிவிப்பில், திருவருட்பிரகாச வள்ளலார் அவர்களின் புகழைப் போற்றும் வகையில் “வள்ளலார் சர்வதேச மையம்“ வடலூரில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 11.06.2021 அன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் சேகர்பாபு ஆகியோர் வடலூர் திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பாக களஆய்வு மேற்கொண்டனர். சேகர்பாபு அவர்கள் தலைமையில் 23.11.2022 அன்று ஆணையர் அலுவலகத்தில் வள்ளலார் சர்வதேச மையம் வடிவமைப்பு தொடர்பாக திட்ட வரைவு சமர்ப்பிப்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர், முதன்மை செயலர் மற்றும் ஆணையர் ஆகியோரால் சில மாற்றங்கள் தெரிவிக்கப்பட்டு மீண்டும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று ( 01.02.2023) அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் பி.கே.சேகர்பாபு  ஆகியோர் தலைமையில் நடைபெற்ற வடிவமைப்பு தொடர்பாக திட்ட வரைவு சமர்ப்பிப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் வள்ளலார் சர்வதேச மையத்தின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள தகவல் மையம், தியான அரங்கம், மியூசியம், கலையரங்கம், தர்மசாலையை விரிவுபடுத்துதல், நிர்வாக அலுவலகம், டிஜிட்டல் நூலகம், முதியோர் இல்லம், கழிவறை மற்றும் குளியலறை வசதிகள்,

குடிநீர் வசதிகள், சன்மார்க்க பாடசாலை அமைத்தல், முன்மண்டபம் அமைத்தல், உணவகம், வாகன நிறுத்துமிடம், புல்தரை அமைத்தல், சிற்பங்கள் அமைத்தல் போன்ற அம்சங்களை  பார்வையிட்டு அறிவுரைகளை வழங்கினர். இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் இரா.கண்ணன், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் ரெகுநாதன், இணை ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: