இபிஎஸ், ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர்கள் அறிவிப்பு மாஜி ஐபிஎஸ் டெல்லி விரைந்தார்: தமிழக தேர்தல் களத்தில் பரபரப்பு

சென்னை: இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மோடி, அமித்ஷா ஆகியோரை சந்திக்க  இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். இதன்பின்னர், யாருக்கு ஆதரவு அல்லது தேர்தல் புறக்கணிப்பு போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜவை கழற்றி விட்ட எடப்பாடி பழனிசாமியால், அதிமுக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பிரதான எதிர்கட்சியான அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிவிப்பு கால தாமதமாகி வந்தது. இதற்கு பாஜவின் நிலைப்பாடு அறிவிக்கப்படாததும், உச்ச நீதிமன்ற வழக்கும் காரணமாக பார்க்கப்பட்டது. இதனிடையே பாஜவின் நிலைப்பாடு எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்விக்கு, பாஜ முடிவுக்காக அதிமுக காத்திருப்பதில் தவறில்லை என்று பாஜ செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியது, அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி சார்பாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. அந்த பணிமனையில் வைக்கப்பட்ட பேனரில், தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என பெயரிடப்பட்டுள்ளது. பாஜ தலைமையிலானது தேசிய ஜனநாயக கூட்டணி ஆகும். ஆனால், அதிமுக இபிஎஸ் அணி உருவாக்கி இருப்பது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி. அதுமட்டுமல்லாமல் இந்த பணிமனை முகப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் படங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், இதில் பாஜவின் பிரதமர் மோடி, அண்ணாமலை உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. அதேபோல் தமிழ்நாடு பாஜவின் நிலைப்பாட்டை தான் ஆதரிப்போம் என அறிவித்த இதர கூட்டணி தலைவர்களான ஜான்பாண்டியன், ஏசி சண்முகம் ஆகியோரின் படங்களும் இடம்பெறவில்லை. மேலும், எடப்பாடி அணி வேட்பாளர் அறிவிப்பது தொடர்பாக பாஜ தலைவர்கள் யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தமிழக பாஜ தலைவர்கள் மற்றும் மேலிட பாஜ தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.  

இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அணியினர் பாஜகவை புறக்கணித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. அதிமுகவின் இரண்டு அணிகள், தனித்து போட்டியிடுவதா, கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவளிப்பதாக என பல கேள்விகளுக்கு முடிவுரை எழுத முடியாமல் தமிழக பாஜ திணறி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் பாஜ தனது முடிவை அறிவித்தால் தான் இடைத்தேர்தலில் என்ன மாதிரியான பங்களிப்பை பாஜ வழங்கும் என்பது தெரியும். இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜ வேட்பாளரை நிறுத்தினால் தனது வேட்பாளரை வாபஸ் பெறுவார் என்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

இப்படி திரிசங்கு நிலையில் தவித்து வரும் தமிழக பாஜ இப்பிரச்னைக்கு ஒரு முடிவை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தள்ளப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தமிழக பாஜவை ஒரு பொருட்டாகவே மதிக்காத சூழ்நிலையில் இடைத்தேர்தலில் என்ன மாதிரியான முடிவை அறிவிப்பது என்ற குழப்பத்தில் தமிழக பாஜ உள்ளது. இந்நிலையில், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, இதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில் நேற்று இரவு 9.25 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக, அசுர பலத்துடன் களத்தில் இறங்கி உள்ளது. இதை எல்லாம் எதிர்த்து நிற்பதற்கு, பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், என்பதுதான் எங்களுடைய கருத்து. வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக ஒருமித்த கருத்துடன், ஒரே வேட்பாளரை நிறுத்தி தேர்தலை எதிர்கொள்ளலாம். ஆனால் பாஜவை பொறுத்த மட்டிலும், ஈரோடு இடைத்தேர்தலை, நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் இது பற்றி, பாஜ நாளை அல்லது மறுநாளோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.  

அதிமுக திறந்துள்ள தேர்தல் அலுவலகத்தில், மோடி படம் இல்லாதது, என்டிஏ என்பதை தவறாக எழுதியது பற்றி எல்லாம், நீங்கள் அவர்களை தான் கேட்க வேண்டும், எங்களை கேட்கக்கூடாது. நான் தற்போது டெல்லிக்கு செல்வது ஈரோடு இடைத்தேர்தல் சம்பந்தமான பிரச்சனைக்காக அல்ல. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து, இலங்கையில் 13வது திருத்தத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும். அங்கு தமிழர்களுக்கு போலீஸ், நிர்வாகம் போன்ற அனைத்திலும் பங்கு கொடுக்க வேண்டும், என்பதை வலியுறுத்த தான் செல்கிறேன். ஈரோடு இடைத்தேர்தல் பற்றி பாஜவின் முடிவு, வியாழன் அல்லது வெள்ளியில் தெரியவரும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Related Stories: