சென்னையில் தொடர்ந்து கஞ்சா விற்ற ரவுடி விஜயகுமார் 1,038 நாட்கள் சிறையில் அடைப்பு: திருவல்லிக்கேணி துணை கமிஷனர் உத்தரவு

சென்னை: சென்னையில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி விஜயகுமாரை திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவுப்படி போலீசார் 1,038 நாட்கள் சிறையில் அடைத்தனர். சென்னை சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (எ) குரூஸ் விஜயகுமார் (35). பிரபல ரவுடியான இவர் மீது, கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை என பல்வேறு வழக்குகள் உள்ளன. இதற்கிடையே, கடந்த நவம்பர் 17ம் தேதி திருவல்லிக்கேணி மாவட்ட துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் முன்பு ஆஜராகி இனி எந்த குற்றங்களிலும் ஈடுபடமாட்டேன் என்றும், திருந்தி வாழப்போவதாக 3 வருட நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

ஆனால், ரவுடி விஜயகுமார் பிணை பத்திர காலத்தில் மீண்டும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த வழக்கில் நுங்கம்பாக்கம் போலீசார் கடந்த 7ம் தேதி கைது செய்தனர். எனவே, எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் என்று பிணை பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு தொடர் குற்றத்தில் ஈடுபட்டதால், போலீசார் செயல்முறை நடுவராகிய திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் முன்பு நேற்று முன்தினம் ரவுடி விஜயகுமாரை ஆஜர்படுத்தினர். அப்போது துணை கமிஷனர் நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறி குற்றங்களில் ஈடுபட்டதால், நன்னடத்தை பிணை நாட்களை கழித்து மீதமுள்ள 1,038 நாட்கள் பிணையில் வெளியே வரமுடியாத வகையில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து போலீசார் ரவுடி விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: