மெரினா கடற்கரையில் ஆயுதங்களுடன் மோதல் விவகாரம் வீடியோ காட்சி மூலம் மாணவர்கள் 20 பேரை கைது செய்யும் பணி தீவிரம்: பதற்றத்தை தணிக்க கல்லூரி முன்பு போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னை மெரினா காமராஜர் சாலையில் மாநில கல்லூரி அமைந்துள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலை என்பதால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருப்பர். இந்நிலையில், மார்பிங் செய்யப்பட்ட போட்டோவில் உயிருடன் இருக்கும் மாணவன் இறந்துவிட்டதாக கூறி ஸ்டேட்டஸ்  வைத்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட மாணவன் சுனில் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கு காரணமான, மாணவர்களை தாக்க நேற்று முன்தினம் சுனில் தரப்பு ஆட்கள் மெரினாவில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் சிலை பின்புறம் மறைந்து இருந்துள்ளனர். அந்த தகவல் பரவியதால், சூர்யா தரப்பு மாணவர்களும் ஆயுதங்களுடன் காத்திருந்துள்ளனர். தொடர்ந்து, இரு தரப்பு மாணவர்களும் ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களிலும் பரவியது.

இதையடுத்து மெரினா போலீசார் மோதல் தொடர்பாக விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பே மோதல் ஏற்பட்டு அண்ணா சதுக்கம் போலீசார் இருதரப்பு மணவர்களை அழைத்து கடிதம் எழுதி வாங்கி அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே மீண்டும் சூர்யா தரப்பினர், ரூபன் தரப்பினரை பழைய நினைவுகளை கூறி கிண்டல் செய்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரூபன் தரப்பை சேர்ந்தவர்கள் கல்லூரி முடிந்ததும், சூர்யா தரப்பு மாணவர்களை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

அதைதொடர்ந்து மெரினா போலீசார் மாணவன் சூர்யா அளித்த புகாரின்படி ஐபிசி 147, 148, 341, 294(பி), 324, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் (19), சுனில் (20) ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில், முதல்வர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் செல்லும் சாலை என்பதால் மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட சம்பவம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க உயர் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இதனால், மெரினா போலீசார் மோதல் வீடியோ காட்சிகளை வைத்து மாணவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் குழு மோதலால், நேற்று கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. அதைதொடர்ந்து மாநில கல்லூரி முன்பு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களுடன் பொது இடத்தில் மோதிக்கொண்ட மாணவர்கள் மீது கல்லூரி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் போலீசார் கல்லூரி முதல்வருக்கு வீடியோ காட்சிகளுடன் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: