வியாசர்பாடியில் புதிய காவல் நிலையம் கட்டப்படுமா? ஆவணங்கள் இல்லாததால் சிக்கல்

பெரம்பூர்: வியாசர்பாடியில், காவல் நிலையத்திற்கு இடம் வாங்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் புதிய காவல் நிலையம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் ஆவணங்கள் பராமரிக்கப்படுவது எப்பொழுதுமே கேள்விக்குறியான விஷயம். அதற்கான தேவைகள் வரும்போது மட்டுமே குறிப்பிட்ட அந்த ஆவணங்களை தேடி செல்வதும், அந்த ஆவணங்கள் இல்லை என்றால் அதற்கான மாற்று வழியை தேடுவதும் வாடிக்கையாகி வருகிறது. இதைபோன்று, சென்னையில் உள்ள பிரபலமான காவல் நிலையத்தில் ஆவணங்கள் தொலைந்து போனதால் அந்த காவல் நிலையம் மீண்டும் கட்டப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மட்டுமல்லாமல் அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களும் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னையில் மிகப் பழமையான காவல் நிலையங்களில் புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி காவல் நிலையமும் ஒன்று. அதிக குற்றச்செயல்கள் நடைபெறும் பகுதி என்பதால் இந்த காவல் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த காவல் நிலையம் கட்டுவதற்காக 1970ம் ஆண்டு 9.4 ஏக்கர் நிலம் காவல்துறை சார்பில் 66,200 ரூபாய்க்கு குடிசை மாற்று வாரியத்திடமிருந்து வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக, அப்பொழுது பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட ஆவணமும் உள்ளது. அதன்பிறகு 1989ம் ஆண்டு வியாசர்பாடி காவல் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. 2004ம் ஆண்டு வரை  அந்த காவல் நிலையம் வியாசர்பாடி எருக்கஞ்செரி நெடுஞ்சாலையில் உள்ள சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது. அதன்பின்பு மிகவும் சிதிலமடைந்த காரணத்தால் அருகாமையில் உள்ள எஸ்ஐ காவலர் குடியிருப்புக்கு வியாசர்பாடி காவல் நிலையம் மாற்றப்பட்டது. அங்கு போதுமான இடவசதிகள் இல்லாததால் தகர கூரையில் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது.

மேலும், அருகில் இருந்த காவலர் குடியிருப்புகள் சிதிலம் அடைந்ததால் அங்கிருந்த காவலர்கள் அனைவரும் காலி செய்துவிட்டு  வெளியேறினர். தொடர்ந்து வியாசர்பாடி காவல் நிலையம் தகர கொட்டகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது மேற்கூரைகள் இடிந்து விழுந்து சர்ச்சையானது. இதனையடுத்து அந்த கொட்டகையில் செயல்பட்டு வந்த சட்டம் -ஒழுங்கு பிரிவு அருகில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டது. மேலும் குற்றப்பிரிவு மட்டும், இடிந்து விழும் நிலையில் உள்ள காவலர் குடியிருப்பில் தற்போதும் செயல்பட்டு வருகிறது.தற்போது, அந்த காவல் நிலையத்தை கட்டும் பணிகள் தொடங்குவதற்கு அந்த காவல் நிலையத்திற்கு  சொந்தமான ஆவணங்களை காணவில்லை என்ற செய்தி வெளியே வந்துள்ளது. ஏற்கனவே, இந்த காவல் நிலையம் மற்றும் காவலர்கள் குடியிருப்பு கட்டுவதற்கு உரிமை கோரப்பட்ட நிலையில் காவல் நிலையம் கட்டுவதற்கான மனுவை மட்டும் தாக்கல் செய்யும்படியும், காவலர் குடியிருப்புகள் தற்போது கட்ட முடியாது எனவும் உயர் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் சென்று வரவே ஒரு வருடம் ஆகிவிட்டது. தற்பொழுது மீண்டும் காவல் நிலையம்  கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கான ஆவணங்கள் காவல்துறையிடம் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. குடிசை மாற்று வாரியத்திடம் விசாரித்த போதும் அங்கும் போதுமான ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது. இதில் குறிப்பிட்ட இடத்தை மேம்பால பணிக்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கையகப்படுத்தி உள்ளனர். அவர்களிடமும் காவல்துறை சம்பந்தமான குறிப்பிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் போர்டு சார்பில் இந்த காவல் நிலையம் கட்டப்பட வேண்டும். ஆனால் அதற்கான ஆவணங்கள் தற்போது வரை சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதில் தொடர்ந்து சிக்கல் எழுந்து வருகிறது.  இதுகுறித்து, சென்னை மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த கடிதமும் தற்போது வரை என்ன நிலையில் உள்ளது என்ற விவரம் தெரியவில்லை எனவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வியாசர்பாடி காவல் நிலையம் அந்த இடத்தில் கட்ட யாராவது ஒரு உயர் அதிகாரி தினமும் கட்டுமான பணிகள் தொடங்கும் வரை தொடர்ந்து கண்காணித்தால் மட்டுமே அந்த இடத்தில் விரைவாக புதிய கட்டிடம் அமையும். இல்லை என்றால் ஏற்கனவே 18 வருடத்திற்கு மேல் தகர கொட்டகையில் செயல்பட்டு வந்ததுபோல மீண்டும் பூங்காவிலேயே காவல்நிலையம் செயல்பட்டு வரும் நிலை வந்துவிடுமோ என காவலர்கள் அஞ்சுகின்றனர். வியாசர்பாடி காவல் நிலைய கட்டுமான பணியில் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் காவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: