ராதாபுரம் தேர்தல் வழக்கு கண்டிப்பாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்: அப்பாவு கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்பு

புதுடெல்லி: ராதாபுரம் சட்டமன்ற தேர்தல் வழக்கை விரிவாக விசாரித்து உத்தரவிடுகிறோம் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தின் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க.வின் இன்பதுரை வெற்றியை எதிர்த்து தி.மு.க.வின் அப்பாவு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தபால் வாக்கு மற்றும் கடைசி நான்கு சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து இன்பதுரை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை விதித்தது. இதனைதொடர்ந்து அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இன்பதுரை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரம் என்பது முடிந்துபோன ஒன்றாகும். மேலும் ராதாபுரம் தொகுதிக்கு சட்டமன்ற தேர்தல் மீண்டும் நடந்து முடிந்து அப்பாவு வெற்றியும் பெற்று தற்போது சபாநாயகராக பதவி ஏற்றுள்ளார். எனவே இவை அனைத்தையும் அடிப்படையாக கொண்டு இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன்,” இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் ஒரு இறுதியான முடிவு வெளியிடப்படாததால் இன்பதுரை தற்போது வரை சட்டமன்ற உறுப்பினருக்கான பென்ஷனை வாங்கி வருகிறார். குறிப்பாக மக்களால் தேர்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் யார் என்பது வாக்களித்த மக்களுக்கு கண்டிப்பாக தெரிய வேண்டும்’’ என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘நாங்கள் இந்த மனுவை முடித்து வைக்கப்போவது கிடையாது. மாறாக விரிவாக விசாரித்து உத்தரவிடுகிறோம்’’ என தெரிவித்து, விசாரணையை இந்த மாத இறுதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: