ஈரோடு கிழக்கில் தென்னரசு போட்டி பாரதிய ஜனதாவை கழற்றிவிட்டு வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இபிஎஸ் அணி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஆனந்த், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் கட்சி மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் தனித்தனியாக இருப்பதால் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் குழப்பத்தில் இருந்தனர். வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி அணியினர் திணறி வந்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் நள்ளிரவு 12 மணி வரை எடப்பாடி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட போதிலும் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இனியும் வேட்பாளர் அறிவிக்காமல் இருந்தால் கட்சி தலைமைக்கு பெரும் அவப்பெயர் ஏற்படும் என்று கருதிய எடப்பாடி பழனிசாமி நேற்று காலை ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளருமான கே.எஸ். தென்னரசுவை வேட்பாளராக அறிவித்தார். இதனிடையே வேட்பாளர் அறிவிப்பில் அதிமுக வேட்பாளர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருந்து வந்த நிலையில், நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் அதிமுக வேட்பாளர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதால் பாஜவை எடப்பாடி பழனிசாமி கழற்றி விட்டுள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

* இரு முறை எம்.எல்.ஏ.

ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காய் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கே.எஸ்.தென்னரசு. வயது 65. தென்னரசு 1988ம் ஆண்டு அதிமுக ஈரோடு நகர செயலாளராகவும், 1992ம் ஆண்டு ஈரோடு நகர இணை செயலாளராகவும், 1995ம் ஆண்டு நகர செயலாளராகவும், 1999ம் ஆண்டு கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராகவும், 2000ம் ஆண்டு மீண்டும் ஈரோடு நகர அதிமுக செயலாளர், 2010ம் ஆண்டு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவராகவும், 2011ம் ஆண்டு முதல் ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் பொறுப்பு வகித்தவர். 2001 மற்றும் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு எம்எல்ஏவாக ஆனார். கே.எஸ்.தென்னரசு, ஸ்கிரீன் பிரிண்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு பத்மினி என்ற மனைவியும், திருமணமான கலையரசன் என்ற மகனும், கலைவாணி என்ற மகளும் உள்ளனர்.

Related Stories: