பரபரப்பான அரசியல் சூழலில் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை..!

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு 8 மணி அளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.27ம் தேதி நடக்கிறது. முன்னதாக தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் ஜனவரி 31ம் தேதி (நேற்று) முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரர்  ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக கடந்த வாரமே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக கூட்டணி கட்சியினர் அங்கு பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

இதேபோல தேமுதிக சார்பில் ஆனந்த், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் கட்சி மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பிரதான எதிர்கட்சியான அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம்  தலைமையில் ஒரு அணியாகவும் தனித்தனியாக இருப்பதால் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் குழப்பம் நீடித்து வந்தது. குறிப்பாக இரட்டை இலை சின்னம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பது, அதிமுக பல்வேறு அணியாக பிரிந்திருப்பது, பாஜ முடிவு அறிவிக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வேட்பாளர் தேர்வில் இழுபறி மற்றும் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் போட்டியிட ஈபிஎஸ் தரப்பு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு வேட்பாளரை அறிவித்த நிலையில் அண்ணாமலை டெல்லி செல்கிறார். பாரதிய ஜனதாவின் நிலைப்பாட்டை ஓரிரு நாட்களில் அறிவிப்பதாக கூறியிருந்த சூழலில் டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களை அண்ணாமலை சந்தித்தபின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: