பெரியகுளம் பகுதி மாந்தோப்புகளில் பூ... பூவா... பூத்திருக்கு மாம்பூ-மகசூல் அதிகமாகும் என மகிழ்ச்சி

பெரியகுளம் : பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மாந்தோப்புகளில் 80 சதவீதம் வரை பூக்கள் பூத்திருப்பதால், இந்தாண்டு மகசூல் அதிகமாக கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான கும்பக்கரை, செலும்பு, முருகமலை, சோத்துப்பாறை, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மாந்தோப்புகள் உள்ளன. இப்பகுதியில் அல்போன்சா, பங்கனப்பள்ளி, காலேபாடி, இமாம்பசந்த், செந்தூரா, கல்லாமை, காசா உள்ளிட்ட பல்வேறு மா ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த 2018 முதல் பருவநிலை மாற்றத்தால் 30 முதல் 40 சதவீதமே மா மரங்களில் பூக்கள் பூத்தன.

மேலும், கடந்தாண்டு 10 சதவீதத்திற்கும் குறைவாக மாம் பூக்கள் பூத்திருந்ததால், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மா விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தாண்டு பருவ மழையும் உரிய நேரத்தில் பெய்ததோடு, தற்பொழுது இரவில் முழுமையான பனிப்பொழிவு, பகல் பொழுதில் வெயிலும் அடிப்பதால், பெரியகுளம் பகுதியில் மா மரங்கள் அனைத்தும் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளன.

இந்த ஆண்டு மாம்பூக்கள் 70 முதல் 80 சதவீதம் பூக்கள் பூத்து குலுங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லாத அளவில் மாம்பூக்கள் பூத்துள்ளதால், இந்த ஆண்டு நல்ல விளைச்சலும், வருவாயும் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: