நாகர்கோவில் வழித்தடத்தை தொடர்ந்து நெல்லை - தூத்துக்குடி இடையே நடத்துனர் இல்லா பஸ் சேவை

நெல்லை : நெல்லையில் இருந்து தினமும் அலுவல் பணிக்காக நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி போன்ற பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் சென்று திரும்புகின்றனர். இதுபோல் அந்தப்பகுதிகளில் இருந்தும் நெல்லைக்கு தினமும் பலர் வந்து செல்கின்றனர். இந்த வழித்தடங்களில் ஒன் டு  ஒன், பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்களை அரசு போக்குவரத்துக்கழகம் இயக்குகிறது. இந்த இடைநில்லா பஸ்கள் நேரடியாக இந்த நகரங்களுக்கு சென்று திரும்புபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. நேரம் சேமிக்கப்படுவதால் இந்த பஸ்களை எதிர்பார்த்து பலர் நின்று கொண்டு கூட பயணிக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனாவுக்கு முன்னர் நெல்லை - நாகர்கோவிணல் இடையே நடத்துனர் இல்லாத பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்கள் இயக்கப்பட்டன. கொரோனா தொடங்கிய போது இந்த சேவை நிறுத்தப்பட்டது. தற்போது கடந்த சில மாதங்களாக இந்த வழித்தடத்தில் மீண்டும் நடத்துனர் இல்லாத விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் நெல்லை மற்றும் நாகர்கோவில் பஸ் நிறுத்தங்களில் இருந்து பஸ்கள் புறப்படும் முன்னர் நடத்துனர்கள் 2 பேர் ஏறி பயணிகளிடம் டிக்கெட்  வழங்கி சீட் நிரம்பியதும் நடத்துனர்கள் பஸ் ஸ்டாண்டிலேயே இறங்கி விடுவர். பஸ் கதவு மூடப்பட்டு வேறு எங்கும் நிறுத்தப்படாமல் நேரடியாக சென்று குறிப்பிட்ட இடத்திற்கு சேர்கிறது. இந்த பஸ்களுக்கு பயணிகளிடம் வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் இதே பாணியை பின்பற்றி தற்போது நெல்லை - தூத்துக்குடி வழித்தடத்திலும் நடத்துனர் இல்லாத பஸ்கள் இரு முனையில் இருந்தும் கடந்த 2 தினங்களாக இயக்கப்படுகின்றன. நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்படும் ஒன் டூ ஒன் பஸ்சில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து கேடிசிநகர் வரை உள்ள முக்கிய நிறுத்தங்களில் ஏறும் பணிகளுக்கு டிக்கெட் வழங்கும் நடத்துனர் கேடிசி நகரில் இறங்கிக் கொள்கிறார். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் வரை நடத்துனரின்றி பஸ் விரைந்து செல்கிறது.  கலெக்டர் அலுவலக நிறுத்தத்தில் தயார் நிலையில் நிற்கும் மற்றொரு நடத்துனர் அந்த பஸ்சில் ஏறி அங்கிருந்து தூத்துக்குடி பஸ் நிலையம் வரை ஏறும் பயணிகளுக்கு டிக்கெட் தருகிறார்.

இதுபோல் தூத்துக்குடியில் இருந்து புறப்படும் நேரடி பஸ்சில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் வரை நடத்துனர் டிக்கெட் வழங்கி அங்கு இறங்கிக் கொள்கிறார். அந்த பஸ் கேடிசி நகர் வந்ததும் அங்கு தயார் நிலையில் நிற்கும் நடத்துனர் நெல்லை புதிய பஸ் நிலையம் வரை டிக்கெட் வழங்கி பயணிக்கிறார். இந்த புதிய நடைமுறையால் நடத்துனர் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய நடைமுறைப்படி பஸ்களுக்கான நடத்துனர்கள் பணி அட்டவணை தயாரித்து நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.

இதுபோல் தமிழகத்தில் பிற பெரு நகரங்களிலும் குறிப்பிட்ட ஊர்களுக்கு இடையே இயக்கப்படும் தொலைதூர பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்களிலும் நடத்துனர் இன்றி இயக்க பரீட்சாத்த முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

டிக்கெட் வழங்க நிறுத்தம்

நெல்லை - தூத்துக்குடி இடையே நடத்துனர் இன்றி இயக்கப்படும் பஸ்களில் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து கேடிசி நகர் பஸ் நிறுத்தம் வரை பயணிகள் ஏறிக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் காலையில் பணிக்கு செல்லும் நேரத்தில் அதிகம் பேர் பஸ்சில் ஏறுகின்றனர். இவர்களுக்கு டிக்கெட் வழங்குவதற்காக சிறிது நேரம் கேடிசி நகர் பகுதியில் நிறுத்தி வைக்கும் நிலை ஏற்படுகிறது. இது அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கு டென்சனை ஏற்படுத்துகிறது.

Related Stories: