தாயின் ஓய்வூதிய பணம் வராததால் விரக்தி அதிகாரிகள் கண் முன் வாலிபர் தீக்குளிப்பு: போலீசார் விசாரணை

தண்டையார்பேட்டை: தாயின் ஓய்வூதிய பணம் வராததால் விரக்தி அடைந்த மகன் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொருக்குப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (43). இவரது தாய் ரேணுகா (60). சென்னை மாநகராட்சி 4வது மண்டலம், 38வது வார்டில் தூய்மைப்பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றார். இவருக்கு வரவேண்டிய ஓய்வூதிய பணம் இதுவரை வரவில்லை. இதுகுறித்து, மகன் கிருஷ்ணமூர்த்தி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

ஏற்கனவே கிருஷ்ணமூர்த்தி கூலிவேலை செய்வதால் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு வந்தது. இதனால், விரக்தியடைந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி 4வது மண்டல அலுவலகத்திற்கு, பெட்ரோல் பாட்டிலை கொண்டு வந்து தனக்குத்தானே உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்த, ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். அதற்குள் கை, கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் கிருஷ்ணமூர்த்திக்கு தீக்காயம் ஏற்பட்டது.

தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தண்டையார்பேட்டை ஆய்வாளர் வடிவேலன், தீக்காயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை மீட்டு,  108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: