வரி செலுத்தாததால் செல்போன் டவரின் மின் இணைப்பு துண்டிப்பு

திருவொற்றியூர்: மாதவரம் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் தங்கள் வீட்டு கட்டிடத்தில் செல்போன் டவர் வைத்துள்ளனர். இவர்களில், 30க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்கள் செல்போன் டவர்களுக்கான வரியை, சென்னை மாநகராட்சிக்கு செலுத்தவில்லை. இவ்வாறு, சுமார் ரூ.2 கோடிக்கு மேல் வரிபாக்கி நிலுவையில் உள்ளதால், வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என்று மாதவரம் மண்டல வருவாய்த்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் விநியோகித்தனர்.

ஆனாலும், அவர்கள் செல்போன் டவர் வரி நிலுவை தொகையை செலுத்தவில்லை. இதனால், மாதவரம் மண்டல உதவி வருவாய் அலுவலர் சூர்யாபானு தலைமையில், வரி மதிப்பீட்டார்கள் திருநாவுக்கரசு, கலியுலியுல்லா, அன்புமணி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் காலை மாதவரம், பொன்னியம்மன்மேடு, தணிகாசலம் நகர், விநாயகபுரம், லட்சுமிபுரம், புழல் போன்ற பகுதிகளுக்கு சென்று வரி செலுத்தாமல் இயங்கும் செல்போன் டவர்களின் மின் இணைப்பை அதிரடியாக துண்டித்தனர். தொடர்ந்து, நிலுவையில் உள்ள வரியை செலுத்தவில்லை என்றால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வருவாய் உதவி அலுவலர் சூர்யாபானு எச்சரித்துள்ளார்.

Related Stories: