அமைந்தகரையில் பரபரப்பு தற்கொலைக்கு முயன்ற மனநோயாளி மீட்பு: போலீசார் விசாரணை

அண்ணாநகர்: அமைந்தகரை மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மனநோயாளியை பத்திரமாக மீட்ட போலீசார், இதுதொடர்பாக,  வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் மேம்பாலத்தின் 40 அடி உயர சுவர் மீது, நேற்று முன்தினம் ஒரு வாலிபர் அமர்ந்துகொண்டு குதிக்கப்போவதாக சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் சிலர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அமைந்தகரை போலீசார், அந்த வாலிபரை பத்திரமாக மீட்டு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரியவந்தது.

போலீசாரின் கேள்விக்கு சரியாக பதில் அளிக்கவில்லை. இதன்பிறகு அந்த நபரின் தலைமுடியை வெட்டி புது சட்டை, பேண்ட் அணிவித்தனர். பின்னர், அவரை சென்னையில் உள்ள காக்கும் கரங்கள் இல்லத்தில் ஒப்படைத்தனர். மேலும், போலீசார் வழக்குபதிவு செய்து, அந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: