தொடர் தோல்விகளால் ஓட்டல் தொழிலுக்கு மாற இருந்தேன்; ஷாருக்கான் பளிச்

மும்பை: எனது படங்கள் தொடர் தோல்வி கண்டதால் ஓட்டல் தொழிலை தொடங்கலாம் என்றும் சினிமாவை விட்டு விலகலாம் என்றும் முடிவு செய்தேன் என்றார் ஷாருக்கான். 4 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் இந்தி படம், உலகம் முழுவதும் 5 நாளில் ரூ.543 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றி விழா மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஷாருக்கான் பேசியது:

எனது படங்களால் அன்பைத்தான் விதைக்கிறேன். உங்கள் அன்புக்காக ஏங்கித்தான் படங்களில் நடிக்கிறேன். அது எனக்கு கிடைக்கும்போது, அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மற்றபடி 100 கோடி, 300 கோடி, 500 கோடி எல்லாம் நம்பர்கள்தான். மக்களின் அன்பும் ஆதரவும்தான் எனக்கு எல்லாமே. ஆனால் எதிர்பாராதவிதமாக படம் வெளியாகப்போகும் சமயத்தில் சில வருந்தத்தக்க விஷயங்கள் நடந்தன. இதனால் கவலை அடைந்தேன். ஆனால் இப்போது எல்லாமே நலமாக முடிந்திருக்கிறது. மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

4 வருடத்துக்கு முன்பு தொடர் தோல்வி படங்களை தந்த பிறகு எனது மார்க்கெட் தடுமாற்றம் அடைந்தது. அப்போது சினிமாவை விட்டுவிட்டு ஓட்டல் தொழிலுக்கு மாறலாம் என நினைத்தேன். ஆனால் மனம் கேட்கவில்லை. 2 வருடம் என்னை நானே புரிந்துகொள்ள செலவழித்தேன். மேலும் 2 வருடம் சில நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

Related Stories: