காவிரியின் குறுக்கே தண்ணீர் எடுக்க கர்நாடகா அரசுக்கு தடை விதிக்க வேண்டும்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: காவிரியின் குறுக்கே சட்ட விரோதமாக கர்நாடகா அரசு தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதர்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்து மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,‘‘கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகர குடிநீருக்காக காவிரியில் இருந்து நீரை முறைகேடாக கர்நாடகா அரசு எடுத்து வருகிறது.

இதுகுறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவும், கண்காணிப்பை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்.  இதுபோன்று சட்ட விரோதமாக காவிரியில் இருந்து நீர் எடுப்பதற்கு கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உடனடியாக தடை விதிக்க வேண்டும். ஏனெனில் நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முன்னதாக தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த இடைக்கால மனு குறித்து உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரணை மேற்கொள்ளும் என தெரியவருகிறது.

Related Stories: