பெரம்பலூர் அருகே பயங்கரம் தம்பதி கழுத்தறுத்து கொலை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே முதிய தம்பதி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தொண்டப்பாடி ஊராட்சியை சேர்ந்தவர் மாணிக்கம் (75). விவசாயி. இவரது மனைவி மாக்காயி (எ) பார்வதி (65). இவர்களது 4 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. முதிய தம்பதியர் தனியாக வசித்து வந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் மாணிக்கத்தின் வீட்டு கதவை மர்மநபர்கள் தட்டியுள்ளனர். அவர் எழுந்து வந்து கதவை திறந்ததும் உள்ளே புகுந்து அவரை தாக்கினர். தடுக்க முயன்ற பார்வதியையும் சரமாரியாக தாக்கினர்.

பின்னர் மிரட்டி பணம் மற்றும் நகைகளை கேட்டுள்ளனர்.  பார்வதி சத்தம் போட்டதால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள், அவரது கழுத்தை அரிவாளால் அறுத்தனர். இதை தடுக்க வந்த மாணிக்கத்தையும் கழுத்தை அறுத்தனர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். பின்னர் மர்மநபர்கள், பார்வதி அணிந்திருந்த 9 பவுன் தாலிக்கொடியை பறித்தனர். அதில் 2 பவுன் தாலி, குண்டு ஜாக்கெட்டுக்குள் சிக்கிக்கொள்ள, 7 பவுனை மட்டும் எடுத்து சென்றனர். வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பி சென்றனர். நேற்று அதிகாலை கதவு திறந்து கிடப்பதை பார்த்து பக்கத்து வீட்டுக்காரர்கள் சென்று பார்த்தபோது அவர்கள் இறந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நர்பகளை தேடி வருகின்றனர்.

Related Stories: