12,000 ஊழியர்கள் பணிநீக்க முடிவை தொடர்ந்து சுந்தர் பிச்சை உட்பட 750 மூத்த அதிகாரிகளின் சம்பளம் குறைப்பு: கூகுள் நிறுவனம் திடீர் முடிவு

வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட 750 மூத்த அதிகாரிகளின் சம்பளத்தை குறைக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல இணைய தேடுபொறி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். சர்வதேச பொருளாதார நெருக்கடியின் காரணமாக உலக முழுவதும் மிகவும் செல்வாக்கு மிக்க நிறுவனங்கள் கூட, தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த பணியாளர்களில் 10 சதவீதம் அளவிற்கு வெளியேற்றி வருகின்றன.

அந்த வகையில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ெமாத்த ஊழியர்களில் 12,000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை, அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை நியாயப்படுத்தி கருத்து தெரிவித்தார். இதுகுறித்து கூகுள் அதிகாரிகள் கூறுகையில், ‘கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவின்படி, அனைத்து உயர் அதிகாரிகளின் சம்பளத்தையும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மூத்த அதிகாரிகளின் போனஸ் குறைக்கப்படும்.

ஊழியர்களின் செயல்திறன் சிறப்பாக இல்லாவிட்டால், அவர்களின் ஈக்விட்டி மானியம் குறைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இத்திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை’ என்றார். அனைத்து மூத்த நிர்வாகிகளின் சம்பளமும் குறைக்கப்படும் என்று சுந்தர் பிச்சை கூறியதால், அவரது சம்பளமும் குறைக்கப்பட உள்ளது. இதுகுறித்து கூகுளின் தலைமை மக்கள் அதிகாரி ஃபியோனா சிசோசியின் கூறுகையில், ‘கூகுள் நிறுவனத்தின் முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள் பட்டியலில் சுமார் 750  மூத்த நிர்வாகிகள் உள்ளனர். அவர்களுக்கும் சம்பளம் குறைக்கப்படும். எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை முடிவு செய்ய இன்னும் சில வாரங்கள் ஆகும்’ என்றார்.

Related Stories: