அடுக்குமாடி சுவர் இடிந்து விழும் முன் எலி உருட்டியதால் 5 பேரின் உயிர் தப்பியது: ராஜஸ்தானில் விநோதம்

தோல்பூர்: ராஜஸ்தானில் அடுக்குமாடி சுவர் இடிவதற்கு முன் வீட்டில் இருந்த எலி ஒன்று உருட்டியதால், தூங்கிக் கொண்டிருந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டம் சிக்ரவுடா கிராமத்தைச் சேர்ந்த ஜெய்பிரகாஷ் குடும்பத்தினர் வழக்கம் போல் இரவில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டில் இருந்த எலி ஒன்று நள்ளிரவில் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தது. எலியின் உருட்டல் சத்தம் கேட்டு மொத்த குடும்பமும் விழித்துக் கொண்டது.

அப்போது வீட்டின் சுவரின் ஒருபகுதியில் விரிசல் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அனைவரும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர். அடுத்த சில நிமிடங்களில், வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. அதன்பின் வீட்டின் 2வது மாடியும் திடீரென இடிந்து விழுந்தது. எலியின் உருட்டல் சத்தம் இல்லாமல் இருந்திருந்தால், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜெயப்பிரகாஷ், நிஹால் சிங், இந்திரா, பபிதா, நதிலால் பூரணி ஆகிய ஐந்து பேரும் சுவர் இடிந்து விழுந்து இறந்திருக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஜெய்பிரகாஷ் கூறுகையில், ‘வீட்டில் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் திடீரென எலி ஒன்று அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. எலியின் உருட்டல் சத்தத்தை கேட்டு, அனைவரும் விழித்தோம். அப்போது வீட்டின் சுவரில் கொஞ்சம் கொஞ்மாக விரிசல் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அதையடுத்து அனைவரும் வீட்டை விட்டு வெளியேறினோம். எலியால் எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரும் உயிர் தப்பினோம்’ என்றார்.

Related Stories: