இடிக்கப்பட உள்ள 72 கடைகளுக்கு நிவாரணம் வழங்க கோரி வியாபாரிகள் சாலை மறியல் : வில்லிவாக்கத்தில் பரபரப்பு

அம்பத்தூர்: வில்லிவாக்கத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இடிக்கப்பட உள்ள 72 கடைகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி  வியாபாரிகள்  சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளின் சமாதான பேச்சுக்கு பிறகு கலைந்து சென்றனர். வில்லிவாக்கம் அடுத்த நியூ ஆவடி சாலை  காந்தி நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. கடந்த 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த குடியிருப்பில் 470 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்கு 72 கடைகள் ஒதுக்கி தரப்பட்டது. தற்போது, கட்டிடங்கள் பழுதடைந்து இருப்பதால் இடித்து புதிய  கட்டிடம் கட்டிகொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

குடிசை மாற்று வாரிய  குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு மாற்று வீடு வழங்கப்பட உள்ள நிலையில், 72 கடைகள் குறித்து எந்த தகவலும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல்கட்டமாக 72 கடைகளையும் இடிப்பதற்காக அண்ணாநகர் 8வது மண்டலம் அதிகாரிகள் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் வந்தனர். இதையறிந்ததும் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி தலைமையில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் வெள்ளையன் தலைமையில் நிர்வாகிகளும் வந்தனர். அவர்கள், திடீரென 72 கடைகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கக்கோரி குடியிருப்பு எதிரேயுள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஐசிஎப் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு வந்து, மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 72 கடைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் பேசி  உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் வியாபாரிகளிடம் தெரிவித்தனர். இதனால் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து கடைகள் இடிப்பு பணியை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.  இந்த சம்பவத்தால்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: