ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன?: கட்சி நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை..!!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, கட்சியின் சட்டமன்ற பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், 66 மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என்று அண்ணாமலையிடம் நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதிமுகவின் இரு அணிகளும் ஆதரவு கோரிய நிலையில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்பட உள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த 4ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுகிறது.

வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தொடங்கியது. வரும் 7ம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுகிறது. 8ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனையும், 10ம் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெறும் நிகழ்வும் நடைபெறவிருக்கின்றன. இதையொட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தயார் நிலையில் இருக்கிறது. இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: