தைப்பூசத் திருவிழா பாதயாத்திரை பக்தர்களுக்கு 20 நாட்கள் அன்னதானம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தைப்பூசத் திருவிழாவிற்கு பாதயாத்திரையாக வருகைதரும் பக்தர்களுக்கு  தினந்தோறும் 10,000 நபர்கள் வீதம் 20 நாட்கள் அன்னதானம் வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் ரெகுநாதன் அனைத்து மண்டல இணை ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து  கொண்டனர்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: புதிதாக தமிழ்நாடு முதல்வர் தலைமையில் பொறுப்பேற்ற திராவிட முன்னேற்ற கழக அரசு இந்து சமய அறநிலையத் துறையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு இறையன்பர்கள் மகிழ்ச்சி அடைகின்ற வகையில் திருப்பணிகள் மேற்கொண்டு எந்த காலத்திலும் நடைபெறாத அளவிற்கு பணிகளை நடத்தியுள்ளது. அதேபோல் கோயில் சொத்துக்களை மீட்டெடுத்தல், ஆகம விதிப்படி நடைபெற வேண்டிய குடமுழுக்கு பணிகள், திருக்குளங்கள், பசுமட காப்பகங்கள், திருத்தேர்கள், திருத்தேர் கொட்டகை, தலமரக்கன்றுகள், நந்தவனங்கள் என அனைத்தையும் மேம்படுத்திய முதன்மையான ஆட்சி நடைபெறுகின்றது. அனைத்து  சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், அன்னைத் தமிழில் வழிபாடு, போற்றி புத்தகங்கள் இப்படி அனைத்திலும் தமிழை முதன்மைப்படுத்துகின்ற ஒரு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் மாதம் தோறும் இந்து சமய அறநிலையத்துறையின் உடைய மாநில அளவிலே இருக்கின்ற மண்டல இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் அனைத்து செயல் அலுவலர் நிலையிலான அலுவலர்களின் 19வது சீராய்வு கூட்டம் நடைபெற்றது.

2021 - 22ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 112 அறிவிப்புகளில் ரூ.1,856 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதேபோல் 2022 - 23ம் ஆண்டு 165 அறிவிப்புகளில் ரூ.2,007 கோடி மதிப்பீட்டிலான  பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இரண்டு நிதியாண்டுகளில் ரூ.3,863 கோடி மதிப்பீட்டிலான பணிகள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் பெரிய நிகழ்ச்சிகள் என்றாலும் திருவண்ணாமலை மகாதீபம், திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா,  பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் என அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் திருவிழாக்களை குடமுழுக்குகளை சிறப்பாக நடத்தி மக்கள் மகிழ்ச்சியோடு பாராட்டுகின்ற ஆட்சி திகழ்வதற்கு உதாரணங்களாகும். வருகின்ற நிதியாண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல் போன்றவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஒரு கால பூஜை திட்டத்தை விரிவுப்படுத்துதல், கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களில் பணிக்கு நிதியுதவி வழங்குதல் என மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தைப்பூசத் திருவிழாவிற்கு பாத யாத்திரையாக வருகைதரும் பக்தர்களுக்கு தினந்தோறும் 10,000 நபர்கள் வீதம் 20 நாட்கள் அன்னதானம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தைப்பூச விழா நடைபெறும் அனைத்து கோயில்களிலும் தேரோட்டத்தை சிறப்பாக நடத்த உத்தரவிட்டுள்ளோம். எங்கு பார்த்தாலும் பக்தர்கள் மகிழ்ச்சி அடையும் அளவிற்கு தைப்பூச விழா சிறப்பாக நடத்தப்படும். சேலத்தில் பட்டியலின இளஞரை கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுத்த கட்சி நிர்வாகி குறித்த செய்தி முதலமைச்சர் கவனத்திற்கு தெரிந்தவுடன் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

திருவண்ணாமலையில் இது போன்ற இருந்த ஒரு நிலையை, 18 ஆண்டுகளாக அந்த கோயிலில் இருந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்து பட்டியலின மக்களை அழைத்துச் சென்று இறை தரிசனம் செய்ய வைத்திருக்கின்றோம். ஆகவே, அனைவரும் சமம் அனைத்து சாதியினரும் சமம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியினுடைய கொள்கை. இத்துறையும் உறுதியாக இருக்கின்றது. மற்ற மாநிலங்களில் இருக்கின்ற மாதிரி தமிழ்நாட்டில் இருக்கின்ற கோயிலில் பிரச்சனைகள் இல்லை. பிரச்சனைகள் ஏதும் இருந்தால் உடனுக்குடன் தீர்க்கின்ற வகையில் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உடனடியாக அரசு தலையிட்டு நீதிமன்றத்தின் வாயிலாகவும், காவல்துறையின் வாயிலாகவும், வருவாய்த்துறையின் வாயிலாகவும் அந்த பிரச்சனையை நிவர்த்தி செய்கின்ற ஒரு மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

மயிலாப்பூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலுள்ள சிவ ஆலயங்களில் இந்தாண்டு மகா சிவராத்திரி விழாவை சிறப்பாக நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் இரவு முழுவதும் நடைபெற இருக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த 20 மாதங்களில் கோயில்களில் நடைபெற்றுள்ள பணிகள் குறித்த கையேட்டினை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். மேலும் கடந்த 27ம் தேதி நடைபெற்ற பழநி தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொண்டு பக்தர்கள் நல்லமுறையில் சாமி தரிசனம் செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டதை பாராட்டி மலேசிய நாட்டைச் சேர்ந்த சங்கரநாராயணன் கோயில் நிர்வாகத்திற்கு ரூ.10 லட்சம் காசோலையை நன்கொடையாக வழங்கினார்.

Related Stories: