கொள்ளிடம் அருகே புதர்மண்டி கிடக்கும் மாதானம் வடிகால் வாய்க்கால்-உடனே தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே மாதானம் வடிகால் வாய்க்கால் புதர்மண்டிக்கிடக்கிறது. எனவே வாய்க்காலை உடனே தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து திருமயிலாடி, கூத்தியம்பேட்டை, கொப்பியம் மாதானம் வழியாக பழையாறு மீன்பிடி துறைமுகத்துக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் வடிகால் வாய்க்கால் உள்ளது.

சாலையோரத்தில் உள்ள இந்த வாய்க்காலின் வழியே சாலையின் இரு புறங்களிலும் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விலை நிலங்களில் மழைக்காலங்களில் அதிகப்படியாக தேங்கும் மழை நீரை வெளியேற்றும் வகையிலும், இந்த வடிகால் வாய்க்கால் அமைந்துள்ளது. மேலும் புத்தூரிருந்து சாலையோரம் உள்ள குடியிருப்புகளில் தேங்கும் மழை நீரையும் வெளியேற்றவும் இந்த வடிகால் வாய்க்கால் பயன்படுகிறது. மழைக்காலங்களில் மழை எவ்வளவு அதிகம் பெய்தாலும் அவ்வப்போது இந்த வாய்க்கால் வழியாக வடிந்து சென்று உப்பனாரில் கலந்து கடலுக்குள் சென்று விடும். கடந்த 10 ஆண்டுகாலமாக தூர் வாராமலும் ஆழப்படுத்தாமலும், அகலப்படுத்தாமலும் விடப்பட்டது.

இதனால் வாய்க்கால் பெரும் பகுதி அடைபட்டு கிடக்கிறது. மேலும் வாய்க்காலின் குறுக்கே சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்களில் அடைக்கப்பட்டு, சாலையில் இருந்து வாய்க்காலின் குறுக்கே செல்லும் வகையில சாலையாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தேங்கும் அதிகப்படியான மழை நீர் எளிதில் வெளியேறிச் செல்ல முடியாமல் சாலையோரம் உள்ள நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விலை நிலங்களில் தேங்கி விடுவதால் வடிய முடியாமல் பல நாட்கள் கிடக்கிறது.

இதனால் நெற்பயிர் தண்ணீருக்குள்ளேயே இருந்து அழுகி சேதம் அடைந்து விடுகிறது. இதன் மூலம் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த சாலை வழக்கமாக அடைக்கப்படாமல் இருந்ததால் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அதிக மழை பெய்தாலும் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் சேர்ந்து வாய்க்கால் வழியாக சென்று வெளியேறிவிடும். இந்த முக்கியமான வடிகால் வாய்க்கால் அடைக்கப்பட்டும் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளதால் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் முழுமையும் வெளியேற முடியாமல் வயலிலேயே தேங்கி நிற்கிறது. இதுகுறித்து விவசாயிகள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நீர் நிலைகள் மற்றும் கரை பகுதிகளில் தினந்தோறும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நீர்வள ஆதார துறையும் இதனை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. இப்படி நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதால் வருடம் தோறும் சுமார் 5000க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அழுகி நாசமாகும் நிலை ஏற்படுகிறது. அதிகாரிகள் ஆற்றின் கரை மற்றும் வாய்க்கால் கரை பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அல்லது அடைக்கப்பட்டிருந்தால் அதனை உடனுக்குடன் நேரில் சென்று பார்வையிட்டு அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகால கண்டு கொள்ளவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதில் கவனம் செலுத்தி இருந்தால் ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த விபரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் சேகரிக்கப்பட்டு மேல் அதிகாரிகளுக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டிருக்கும். அதன் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாகவும் இருக்கும்.

ஆனால் நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்பு விவகாரத்தில் இதுவரை மெத்தனம் காத்து வருகின்றனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக மாதானம் வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட முக்கியமான பாசன வடிகால் வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரியும் ஆழப்படுத்தியும் அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க பொருளாளர் மீசை கலையரசன் தெரிவித்தார்.

Related Stories: