சிதம்பரம் பகுதியில் திடீர் மழையால் சேதம் நெல்கொள்முதல் இடங்களில் மேற்கூரை அமைக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

சிதம்பரம் :  சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை திடீரென பெய்த மழையால், இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நடவு நெற்கதிர்கள் மழையில் நனைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான வல்லம்படுகை, வேளக்குடி, அகரநல்லூர், திட்டுக்காட்டூர், பெரம்பட்டும் அக்கறை ஜெயங்கொண்டபட்டிணம், சிவாயம், நாஞ்சலூர் உட்பட பல பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சம்பா நடவு செய்திருந்தனர்.

இந்நிலையில் நெற்பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. இதில் பாதிக்கு மேல் அறுவடை பணியும் முடிந்துள்ளது.

நேற்று காலை திடீரென இப்பகுதியில் பெய்த மழையால் விளைச்சல் நெற்பயிர்கள் மழையில் நனைந்துள்ளது. ஒரு சில இடங்களில் நெற்கதிர்கள் தரையில் மடிந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.தமிழ்நாடு நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகள் களத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இவற்றில் தார்ப்பாய் போட்டு மூடி இருந்தும் இந்த திடீர் மழையால் நெல் மூட்டைகளும் மழையில் நனைந்துள்ளது. மேலும் அரசாங்கம் மழையில் நனையாதவாறு ஒரு மேற்கூரை அமைத்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் தெரிவித்ததாவது,சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரிக்கு உட்பட்ட தாலுகாக்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா நடவு நெல் பயிர் செய்யப்பட்டுள்ளது. இவை நேற்று பெய்த திடீர் மழையால் நனைந்து தரையில் மடிந்துள்ளது. இதனால் நெல்மணிகள் கீழே விழுந்து பாதிக்கு மேல் தரையில் கொட்டிவிடும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்காது.

மேலும் எங்கள் பகுதியில் சம்பா நடவு உடன் உளுந்து விதைத்து உள்ளோம். தற்போது நெல் அறுவடைக்குப் பின் இவை எங்களுக்கு அதிக மகசூல் கொடுத்து லாபமும் கிடைக்கக்கூடிய ஒரு பயிர் வகையாகும். தற்போது பெய்த மழை மேலும் தொடர்ந்து பெய்தால் எங்கள் விவசாயிகளுக்கு பெரிய ஒரு இழப்பீடாக இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகம்

எங்கள் பகுதியில் நெல் கொள்முதல் செய்யும் இடங்களில் மேற்கூரை அமைத்து மழையில் நனையாதவாறு கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

மேலும் நெற்பயிர்கள் மழையில் நனைந்து உள்ளதால் ஈரப்பதம் அதிகமாக உள்ளது என கொள்முதல் செய்யாமல் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

Related Stories: