கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கிராம மக்கள் மனு

*தீக்குளிப்பு முயற்சிகளை தடுக்க கூடுதல் கண்காணிப்பு

திருவண்ணாமலை : கிராமத்துக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் நேற்று மனு அளித்தனர். மேலும், தீக்குளிப்பு முயற்சிகளை தடுக்க போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ பிரியதர்ஷினி தலைமையில் நேற்று நடந்தது. அதில், கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப்சிங், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், பட்டா மாற்றம், அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 348 பேர் மனுக்களை அளித்தனர்.பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, டிஆர்ஓ பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப்சிங் ஆகியோர் உத்தரவிட்டனர்.

மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து, துறை வாரியாக ஆய்வு நடத்தப்பட்டது. நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், தண்டராம்பட்டு அடுத்த ரெட்டியாபாளையம் கிராமத்தை சேர்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களுடைய குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துத்தர வலியுறுத்தி மனு அளித்தனர். மேலும், அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு தரப்பினர், தங்களுடைய பகுதிக்கு வந்து தகராறு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும், வீட்டுமனைப்பட்டா, மயான வசதி உள்ளிட்டவைகளை செய்துத்தர வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.

மேலும், வந்தவாசி அடுத்த சாத்தப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த தேவி(35) என்பவர், கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றார். உடனடியாக, அவரை அங்கிருந்து போலீசார் வெளியேற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையில், மழையூர் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர், தன்னை காதலித்துவிட்டு, திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் குறைதீர்வு கூட்டத்தின்போது, தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவம் நடைபெறுவதால், நேற்று கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் கொண்டுசென்ற பைகள், பொருட்களை சோதித்த பிறகே அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, டிஆர்ஓ பிரியதர்ஷினி முன்னிலையில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். அப்போது, இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன், குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின் படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன்.

தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன் அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன்.

இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்கும் என உறுதிமொழி ஏற்றனர். அதைத்தொடர்ந்து, தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடந்தது. அதிலும், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பங்கேற்று உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Related Stories: